பாலத்தின் மீது குடிநீர் குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்ட குழாயை, பவானி ஆற்றுப் பாலத்தின் மீது பதிக்க, நெல்லித்துறை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, 22.20 கோடி ரூபாய் செலவில், நெல்லித்துறை அருகே, விளாமரத்தூரிலிருந்து குடிநீர் திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நெல்லித்துறை ஊருக்குள்ளும், பவானி ஆற்று பாலத்தின் மீதும் குழாய்கள் பதிக்கும் பணியானது துவங்கியது.இதற்கு நெல்லித்துறை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் கமிஷனர் அமுதா, இன்ஜினியர் ராமசாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பவானி ஆற்றுப் பாலத்தின் மீது, அதிக எடை கொண்ட குடிநீர் குழாய் கொண்டு செல்லும் போது, பாலத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் குடிநீர் குழாய் கொண்டு செல்ல, தனியாக ஒரு பாலம் கட்டுப்படி கூறினர். கமிஷனர் அமுதா, என்ஜினீயர் ராமசாமி ஆகியோர் பொது மக்களிடம், குடிநீர் குழாய் கொண்டு செல்ல, தனியாக பாலம் கட்ட, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி அனுமதியும், தொகையும் பெற வேண்டும். அதுவரை மிகவும் எடை குறைந்த குடிநீர் குழாய் பாலத்தின் மீது பதிக்க முடிவு செய்துள்ளோம். எனவே குழாய் பதிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, கூறினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.