அத்திக்கடவு குழாய் உடைப்பு சரி செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
அன்னூர்: அத்திக்கடவு குழாய் உடைப்பை சரி செய்ய, போலீஸ் பாதுகாப்போடு சென்ற அதிகாரிகள் மக்கள் எதிர்ப்பால், ஏமாற்றத்துடன் திரும்பினர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், நல்லி செட்டிபாளையத்தில் உள்ள 12 ஏக்கர் குளத்திற்கு தண்ணீர் வரும் ஏர் வால்வு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைப்பு வழியாக, அதிக அளவில் நீர் குளத்திற்கு செல்கிறது. இந்த ஊருக்கு மேற்கே உள்ள மற்ற குளங்களுக்கு, இதனால் மிகக் குறைந்த அளவு நீர் தான் செல்கிறது. அத்திக்கடவு அவிநாசி திட்ட உதவி பொறியாளர்கள் கவிதா, ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்போடு, நல்லிசெட்டி பாளையத்தில் குழாய் உடைப்பை சரி செய்ய, நேற்று மதியம் சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், '12 ஏக்கர் பரப்பளவு உள்ள, எங்கள் ஊர் குளத்திற்கு வெறும் ஒன்றேகால் இன்ச் குழாய் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அந்த குழாயில் வரும் அத்திக்கடவு நீரால் குளம் நிரம்ப பல மாதங்களாகும். எனவே குழாயை பெரிதுபடுத்தும் வரை, ஏர் வால்வில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யக்கூடாது' என வாக்குவாதம் செய்தனர். எஸ்.ஐ. மோகன் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் சமாதானப்படுத்தியும் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் குழாய் உடைப்பை சரி செய்ய முடியாமல், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.