மொபைலில் வங்கிகள் பெயரில் போலி விளம்பரம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- நமது நிருபர் -: பிரபல வங்கிகள் பெயரில் வலம் வரும் போலி விளம்பரங்களால், பொதுமக்கள் பணத்தை இழப்பது தொடர்கிறது. பொதுமக்களின் 'மொபைல் போன்'களுக்கு, பிரபல வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சார்பில், அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதில் பணம், பரிசுப்பொருள் தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு இடம் பெறுகிறது. அந்த 'லிங்க்'கிற்குள் சென்று, பொதுமக்கள் பார்க்கும் போது, அத்தகைய தொகை எதுவும் வருவதில்லை; மாறாக, அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து தான் பணம் மோசடி செய்யப்படுகிறது. அதன்பிறகு தான், 'இது போலி விளம்பரம்' என, மக்கள் உணர்கின்றனர். பணத்தை இழந்த மக்கள், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்து, இழந்த பணத்தை பெற முயற்சித்து வருகின்றனர்; இருப்பினும், பலருக்கும் இழந்த தொகை கிடைப்பதில்லை. கடந்த இரு நாளாக, ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி பெயரில் மொபைல் போன்களுக்கு, ஒரு வாட்ஸாப் தகவல் வருகிறது. அதில், 'இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது' என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 'பணத்தை பெற்ற பயனாளிகள்' என்ற பெயரில் பலரது பெயரும் அறிவிப்பாக அந்த தகவலில் இடம் பெறுகிறது. வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ''இது, போலி விளம்பரம்; பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம்'' என்றனர். நிராகரிக்க வேண்டும் திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் காதர் பாஷா கூறுகையில், 'பொதுமக்கள் பலரும் இதுபோன்ற போலி விளம்பரங்கள் வாயிலாக ஏமாந்த பலரும், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து வருவது தொடர்கிறது; போலி விளம்பரங்கள் வாயிலாக, பலர் ஏமாந்து வருகின்றனர். மோசடியை கண்டறிந்து, பணத்தை மீட்டுக் கொடுக்க போலீசாரும் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். இருப்பினும், போலீசார் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், இதுபோன்ற மோசடி புகாரின் மீது விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது; கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பாமல், பொதுமக்கள், அதை நிராகரிக்க வேண்டும்' என்றார்.