நடுநிலைப்பள்ளியில் நுால்கள் வெளியீடு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, நுால்களை வெளியிட, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா பெற்றுக் கொண்டார். ஆசிரியர் கீதா, 'யுரேகா யுரேகா' மற்றும் 'மாண்புமிகு ஆளுமைகள்' என்ற இரு நுால்களை இலவசமாக எழுதி வழங்கினார். ஆசிரியர் கீதா கூறியதாவது: 'யுரேகா யுரேகா' அறிவியல் நுாலில் எளிய அறிவியல் சோதனைகள் ரெக்கார்டு நோட்டில் எழுதுவதற்கு ஏற்றவாறு படங்கள் வரைந்து, பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால் வீடியோ செய்முறை வரும்.அன்றாட வாழ்வில் அறிவியல் கருத்துகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என வாழ்வியலோடு இணைந்து கூறப்பட்டுள்ளது. மேல்புவனகிரி கடலுாரில் உள்ள, கல்விக்கண் திறந்த காமராஜர் அறக்கட்டளை, 'யுரேகா யுரேகா' 100 நுால்கள் வெளியிட நன்கொடை வழங்கி உள்ளனர். 'மாண்புமிகு ஆளுமைகள்' என்ற நுாலில், 11 ஆளுமைகள் சமூக சேவை, கல்வி சேவை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சேவை, முதியோர்க்கான அன்னதான சேவை செய்பவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. சேவை மனப்பான்மை பற்றி மாணவர்களுக்கு தற்காலத்திலுள்ள ஆளுமைகள் பற்றி கூறி, மாணவர்கள் அவ்வாறே சேவைகள் செய்ய வழிகாட்டுதலுக்காக இந்நுாலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு, கூறினார். விழாவில், ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.