புதுப்பாளையம் தடுப்பணை நிரம்பியது
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையம் தடுப்பணை நிரம்பியதால், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தினசரி கனமழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகள், பள்ளம், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் தடுப்பணைக்கு வரும் வெள்ள நீரின் அளவு, கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் புதுப்பாளையம் தடுப்பணை நிறைந்து காணப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் மழை நீர், இடிகரை, வையம்பாளையம் அருகே கவுசிகா நதியுடன் இணைந்து செல்கிறது.இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, நேரு காலனி, வெற்றிலை காளிபாளையம், ஸ்ரீ பாலாஜி நகர், ராக்கிபாளையம் வழியாக புதுப்பாளையம் தடுப்பணை வந்து அடைகிறது. வரும் வழியில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பள்ளத்தில் வரும் வெள்ள நீரில் கலப்பதால், புதுப்பாளையம் தடுப்பணை முழுவதும் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது. ஆகாயத்தாமரையுடன் காணப்படும் புதுப்பாளையம் தடுப்பணையை துாய்மைப்படுத்த, இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் வெள்ள நீரில், கழிவு நீர் கலப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பணையில் கழிவு நீர் தேங்கி, நிலத்தடி நீரும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது'' என்றனர்.