ரேபிஸ் நோயை தடுப்பூசி வாயிலாக தடுக்கலாம்! இன்று உலக ரேபிஸ் தினம்
பொள்ளாச்சி: 'ரேபிஸ் நோய் பரவுவதை, தடுப்பூசிகள் வாயிலாக தடுத்து பாதுகாத்துக்கொள்ளலாம்,' என, கால்நடை டாக்டர் அசோகன் தெரிவித்தார்.கோவில்பாளையம் கால்நடை மருந்தக டாக்டர் அசோகன் கூறியதாவது:உலகம் முழுவதும், வெறிநாய்க்கடியால் ஆண்டுக்கு, 65 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை, 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளி விபரம். அதே வேளையில் இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் உயிர் பிழைத்து விடலாம்.இந்தியாவில் முறையாக தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால் தான், 95 சதவீதம் இந்த நோய் ஏற்படுகிறது. இதுதவிர சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ் நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். நோய் அறிகுறி
இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது, இதை தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிடவோ, தண்ணீர் பருகவோ முடியாது.ரேபிஸ் நோய் உள்ளவர்கள், தண்ணீரை கண்டதும் பயப்படுவர். காரணம், தண்ணீரை கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படும். இதற்கு 'ஹைட்ரோபோபியா' எனப்பெயர்.இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்றுபட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றி காணப்படுவர். நோயின் இறுதி கட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு, சுவாசம் நின்று உயிர் இழப்பர். தடுப்பூசி முறை
நாய்கடிக்கு நவீன தடுப்பூசிகள் வந்து விட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபிஸ் நோயை, 100 சதவீதம் தடுத்து விடலாம்.எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும், பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி போட வேண்டும். அதற்கு குட்டிகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே போதுமானது.அங்கு கால்நடை டாக்டர், டிஸ்டம்பர் மற்றும் மிக முக்கியமாக பார்வோ வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பூசியை செலுத்துவார். அடுத்த, 25 நாட்களுக்குள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதனுடன் நாய்க்குட்டிகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி முடிந்துவிடும்.அதன்பின் ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்.மனிதர்களுக்கு எப்படி தடுப்பூசிகள் நோய்களிலிருந்து காப்பதற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றனவோ, அதுபோல நாய்களுக்கும் தடுப்பூசிகள் மிக அவசியமானவை. நாய்க்கும், அவற்றால் மனிதர்களுக்கும் நோய் பரவுவதில் இருந்து தடுப்பூசிகள் வாயிலாக பாதுகாத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு அவசியம்
ரேபிஸ் நோயாளியை சில மருந்துகள் வாயிலாக, செயற்கையாக கோமா நிலைக்கு கொண்டு சென்று, அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஒரு வாரத்துக்கு கொடுத்தால், ரேபிஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால் நோய் குணமாகிவிடுகிறது.உடலுக்குள் புகுந்த ரேபிஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை மூளையை தாக்குவதற்கு முன்னால் இந்த சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. உயிர் காக்கும் இந்த சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டாக்கால் என பெயர். தமிழகத்தில் வேலுாரில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த, 2007ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி உலக ரேபிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. செல்லப்பிராணி வளர்ப்போர், அவற்றுக்கு தடுப்பூசி செலத்தி பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.