தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது, பனிக்காலமாக உள்ளது. இந்நிலையில், பனிக்காலத்தில், கோமாரி நோய் அதிகமாக பரவும் தன்மை கொண்டதால், கால்நடைகள் நோய் தாக்குதலுக்குள்ளாவதை தடுக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 21 நாட்கள், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பேரூர், மாதம்பட்டி, வேடபட்டி, தொண்டாமுத்தூர், மத்வராயபுரம் கால்நடை மருந்தகங்கள் மூலம் கிராமங்கள்தோறும் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொண்டாமுத்தூரில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் (பொ) ராஜாங்கம் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் இளங்கோ, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கீதா, தொண்டாமுத்தூர் கால்நடை மருந்தக உதவி டாக்டர் சங்கர் ஆகியோர், மாடுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மொத்தம் உள்ள 17,726 மாடுகளுக்கும், 124 எருமை மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கால்நடை வளர்ப்போர், தங்களின் கால்நடைகளுக்கு, தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.