ரயில்வே மேம்பால பணிகள் ஆய்வு
மேட்டுப்பாளையம்: காரமடை-தோலம்பாளையம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளின் தரம் குறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். காரமடை நகரில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த போக்குவரத்து நெரிசலால், கோவை, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம், கன்னார்பாளையம் ஆகிய நான்கு சாலைகளில், வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.இதனால் மேட்டுப்பாளையம், காரமடை, மருதூர், சாலையூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய பகுதி பொதுமக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க, காரமடை-தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்ட, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 28.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, ரயில்வே பாதையை கடந்து தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றன. இதில் ரயில் பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் மெதுவாக நடக்கிறது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் தலைமையில், கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி கோட்ட பொறியாளர் சுஜாதா தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சித்ரா மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.