உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகள் முன் தேங்கும் மழை நீர்: தரைமட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு

வீடுகள் முன் தேங்கும் மழை நீர்: தரைமட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இருந்து வரும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகள் முன் தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கிறது.பொள்ளாச்சி நகராட்சியையொட்டி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு இருந்து மழைநீர், கழிவுநீர் செல்லும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி வரை கட்டப்பட்ட வடிகால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், அந்த நீர், ஊத்துக்காடு ரோடு நான்கு ரோடு சந்திப்பு பகுதி அருகே உள்ள தரைமட்ட பாலம் வழியாக, நகர எல்லையில் தேங்கி வீடுகளின் முன் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இருந்து வரும் நீர் வடிந்து செல்ல வழியில்லை. தனியார் இடத்துக்கு செல்வது தடுக்கப்பட்டது. தற்போது, அந்த நீர் செல்ல வழியில்லாமல் மழை காலங்களில் ரோட்டில் வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால், வடிகால் வழியாக வரும் மழைநீர் குட்டை போல தேங்கி உள்ளது. தாழ்வான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.மேலும், வீட்டின் முன் தேங்கும் நீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு இல்லை. தாழ்வான பகுதிக்கு வரும் நீர் வெளியேற, தரைமட்ட பாலம் அமைத்து எதிரே உள்ள வடிகாலில் இணைக்க வேண்டும். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !