உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜகோபுரம் கட்டுமான பணிகள்; டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

ராஜகோபுரம் கட்டுமான பணிகள்; டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம், டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும், என, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தெரிவித்தார். கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் கோவிலில் திருப்பணிகள் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. இதை அடுத்து கோவிலில் சுற்று பிரகார மண்டபம், மதில் சுவர், நடைபாதை மண்டபம், முடி காணிக்கை மண்டபம், நவீன கழிப்பிடம் என, 14 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.30 கோடி ரூபாய் செலவில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுர திருப்பணிகள், உபயதாரர்கள் வாயிலாக நடைபெறுகின்றன. இதுவரை ராஜகோபுரத்தில் ஆறு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏழாவது நிலை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. கோபுரத்தின் ஏழு நிலைகளும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். சுற்றுப்பிரகார மண்டபத்தில் சிமெண்ட் பூச்சுகள் பூசும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து திருப்பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி