பணி நிரந்தரம் செய்யக்கோரி பேரணி
வால்பாறை; வால்பாறையில், பணி நிரந்தரம் செய்யக்கோரி துாய்மை பணியாளர்கள் பேரணி நடத்தினர்.வால்பாறை துாய்மை பணியாளர்கள் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பேரணி நடந்தது. தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பணியாளர் சங்க தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணி, துணைத்தலைவர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி அலுவலகத்தின் முன்பாக துவங்கிய பேரணியை, பா.ஜ., மண்டல் தலைவர் செந்தில்முருகன், மண்டல் பார்வையாளர் தங்கவேல், ம.தி.மு.க., (தொழிற்சங்கம்) மாநில செயலாளர் கல்யாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணியில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2021ல் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.