கோவை அருகே அரிய வகை தவளை; சூழல் மாற்றத்தால் குறைகிறது எண்ணிக்கை
கோவை; கோவை - பாலக்காடு வழியில் அமைந்த சித்தூர் கிராமத்தில், அரிய வகை தவளை ஒன்று, அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த தவளை இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரம் வரை பரவலாக வாழக்கூடிய இத்தவளை, 'உபெரோடான் டேப்ரோபானிகஸின்' என்ற அறிவியல் பெயருடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இது, குறுகிய வாய் கொண்ட மைக்ரோஹைலிட் வகை தவளைகளில் ஒன்று ஆகும். மரங்களில் ஏறும் திறனும், ஈரமான பகுதிகளில் வாழும் இயல்பும் கொண்ட இவை, பெரும்பாலும் இரவில்தான் தோன்றும் தன்மை கொண்டவை.மண்ணுக்குள் புதைந்து வாழும் இயல்பின் காரணமாக, இதுவரை இவை குறித்து பெரிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார், இத்தவளையை கண்டறிந்த சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் அசோக சக்கரவர்த்தி.இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:இந்திய வர்ணம் பூசப்பட்ட தவளை, தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் பரவலாக காணப்பட்டது. ஆனால் 1990களுக்குப் பிறகு, அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. உலகளவில் தவளையினங்களில், 40 சதவீதம் இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது.தமிழகத்திலும் இவ்வகை தவளைகள், தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. ஈரநிலங்கள் அதிகம் குறைந்துவிட்டன. வெப்பநிலை அதிகரிப்பதும், இவ்வகை தவளைகளின் வாழ்விடங்களைத் தகர்க்கிறது. மீண்டும் இத்தவளை கண்டறியப்பட்டுள்ளதால், இது தொடர்பான ஆய்வுகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.