வேகத்தை குறைப்போம்; விபத்தை தவிர்ப்போம்! வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாதுகாப்பான சாலைப் பயணம் குறித்து வாகன ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆண்டுதோறும், ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடத்தப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, போலீசார், மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை என, பிற துறைகளுடன் இணைந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செய்து வருகின்றனர்.அவ்வகையில், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஆழியாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், தலைமை வகித்தார். தொடர்ந்து, அவ்வழித்தடத்தில் வந்த வாகன ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மொபைல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டக் கூடாது; வேகத்தை குறைப்போம் - விபத்தை தவிர்ப்போம்; டூ வீலர் ஓட்டும்போது தலைகவசம் அணிவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கைகளில் ஏந்தியவாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வால்பாறை உதவிக் கோட்டப் பொறியாளர் கார்த்திக்குமார், உதவிப் பொறியாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் போலீஸ் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்த பேரணியை, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.பேரணியில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது, போதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. தலைக்கவசம் அணிவது, உயிர்க்கவசம் போன்றது. லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலைவிதிகளை மதிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, காந்திசிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், போஸ்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்றது. பேரணியில், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.