வட்டார கலை திருவிழா; வெளிப்பட்டது பன்முக திறன்: அசர வைத்த மாணவர்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6, 7, 8ம் வகுப்புக்கான வட்டார கலைத்திருவிழா போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக, ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டு, 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, மொத்தம், 13 போட்டிகள், முதலில் குறுமைய அளவில் நடத்தப்படுகிறது. அதில், முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் வட்டார அளவில் பங்கேற்பர். இரண்டாம் கட்டமாக, 6 முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 11 போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் புள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், வட்டார அளவில் பங்கேற்பர்.அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை வட்டார கல்வி அலுவலர்கள் பூம்பாவை, குளோரிஸ்டெல்லா, மேற்பார்வையாளர் (பொறுப்பு) காயத்ரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.எல்.எம்.எஸ்., நர்சரி பள்ளியில், வர்ணம் தீட்டுதல், களிமண் வேலைப்பாடு, மணல் சிற்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தனிநபர்நடிப்பு, மிமிக்ரி, நகைச்சுவை வழங்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதலிடம் பிடிப்போர், மாவட்ட போட்டிக்கும் தகுதிபெறுவர்.* பொள்ளாச்சி வடக்கு வட்டார கலைத்திருவிழா, வட்டார அலுவலகத்தில் நடந்தது. அதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.குறுவள மைய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தகுமாரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஸ்வப்னா, வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாணவர்கள், சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து மாறுவேடம் அணிந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர். உடுமலை
உடுமலை வட்டார அளவில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புக்களுக்கான போட்டிகள் நேற்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தன.குழு நடனம், தனி நடனம், பரதம், கிராமியம், கும்மி, ப்ரீ ஸ்டைல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடனமும், ஒரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அதற்கான நடனம், நாடகம், கைவினைப்பொருட்கள் செய்வது, மண்பாண்ட பொருட்கள் வடிவமைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.போட்டிகளை உடுமலை வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைத்தனர்.வெற்றி பெறுவோர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வால்பாறை
வால்பாறையில் ஆறு முதல் 12 ம் வகுப்பு வரையினான மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா நேற்று துவங்கியது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் வரவேற்றார்.பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் சாந்தகுமாரி தலைமை வகித்து பேசும் போது,''மாணவர்களின் பன்முகத்திறன்களை வெளிப்படுத்தவே ஆண்டு தோறும் கலைவிழா நடத்தப்படுகிறது. இது ஒரு போட்டியாக கருதாமல், விழாவாக நினைத்து மாணவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது மிக அவசியம்,'' என்றார்.போட்டிகளை, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நடனம், பாட்டு, ஓவியம், வர்ணம்தீட்டுதல், பேச்சு, வில்லுப்பாட்டு, மாறுவேடப்போட்டிகள் நடத்தப்பட்டன.விழாவில், வால்பாறையில் உள்ள 63 பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். - நிருபர் குழு-