மொக்கை மயானம் சீரமைப்பு
மேட்டுப்பாளையம்; புதர் நிறைந்து இருந்த ராஜபுரம் மொக்கை மயானத்தை, மேட்டுப்பாளையம் நந்தவனம் நிர்வாகத்தினர் சீரமைத்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்டது, ராஜபுரம் மொக்கை மயானம். இதை பங்களா மேடு, ராஜபுரம் மொக்கை, சங்கர் நகர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள், பயன்படுத்தி வந்தனர். மின் மயானம் வந்ததை அடுத்து, பொதுமக்கள் மொக்கை மயானத்தை பயன்படுத்துவது குறைந்தது. இதனால் முள் செடிகள் வளர்ந்தும், புதர் நிறைந்து காணப்பட்டன. உடலை எரிக்கும் கான்கிரீட் கூடம், மிகவும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. காரமடை, மேட்டுப்பாளையத்தில் உள்ள மின்மயானங்கள், பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன. அதனால் ராஜபுரம் மொக்கை மயானத்தை, மக்கள் பயன்படுத்த துவங்கினர். மயானத்தில் செடிகள், முள் மரங்கள் வளர்ந்து புதர் நிறைந்து இருந்ததால், உடல்களை அடக்கம் செய்ய மக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர், மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய நந்தவன நிர்வாகத்தினரிடம், ராஜபுரம் மொக்கை மயானத்தை சுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து நந்தவனம் நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மயானத்தை சீரமைத்தனர்.