ரிப்போர்ட்டர் லீக்ஸ்
மண் கொள்ளையில 'கரன்சி' மழை
உடுமலை தாலுகா அலுவலகம் அருகில், கிராம மக்கள் இருவர்கள் கிராவல் மண் கடத்தல் பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்களது உரையாடலை கவனித்தேன்.உடுமலையில, சட்ட விரோதமாக கிராவல் மண் கொள்ளை நடக்குது. மடத்துக்குளம் தாலுகா துங்காவி கிராமத்துல, மண் எடுக்க கனிம வளத்துறை 'பர்மிட்' பெற்று, ஆளும்கட்சியில மாவட்ட தலைமை ஆதரவோட, பெரிசனம்பட்டி கரடு பகுதியில, லோடுக்கு, 5 ஆயிரம் ரூபா வாங்கிட்டு, சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்துறாங்க. வருவாய் துறை, கனிமத்துறை அதிகாரிகள் 'ஆசி'யோட மண் கொள்ளை நடக்குது.நான் மட்டும் என்ன சளைத்தவனா, என்கிற மாதிரி உட்கோட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருத்தரு, ஒரு தரப்பு கனிம வளக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, 'மாமூல்' வாங்கிட்டு, கடத்தல் வழித்தடத்துக்கு ரூட் போட்டு கொடுத்திருக்காரு.இதுல என்ன கூத்துனா, 'காக்கி' சட்டையை கவனிச்சுட்டு போனா, அவங்க மடக்கி பிடிச்சு வசூலிக்கறாங்க. அந்த அதிகாரிகள கவனிச்சுட்டு போற வண்டிய 'காக்கி' மடக்குது. இரு அரசு துறை அதிகாரிகளும், சட்ட விரோத கனிமவள கொள்ளைக்கு பச்சைக்கொடி காட்டிட்டு, 'கரன்சி' வசூல்ல மட்டும் குறியா இருக்காங்க.சமீபத்துல, எலையமுத்துாருல, துறை அதிகாரிகள் அஞ்சு லாரிகள மடக்கி பிடிச்சு, மூனு லட்சம் ரூபா வசூலிச்சுட்டு, விட்டுட்டாங்களாம். இப்படியே போச்சுனா, மலையும் இருக்காது; மண்ணும் இருக்காதுனு, சமூக தத்துவத்தோட உரையாடல முடிச்சாங்க. எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது!
உடுமலையில் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பெற்றோரை, ஆசிரியர்கள் சமாதானபடுத்தும் வகையில் பேசிக்கொண்டிருந்தனர். பெற்றோர் பள்ளியை விட்டு கிளம்பியதும், இரண்டு ஆசிரியர்களும் தங்களின் பரிதாப நிலையை பகிர்ந்து கொண்டனர்.ஸ்மார்ட் கிளாஸ் அந்த கல்வியாண்டுல வரும்னு சொல்லிதான் குழந்தைகள பள்ளியில சேர்த்தீங்க. ஆனா, இதுவரை ஒன்னும் வரலையே. இதோ இன்டர்நெட் கனெக்சன் வந்துருச்சு, எல்லா உபகரணங்களும் வந்தாச்சுனு சொல்றீங்க.ஆனா, வகுப்பு ஆரம்பிச்ச மாதிரி தெரியலையே. அரசு பள்ளிகள்ல என்ன தான் நடக்குதுனு பெற்றோர் கேக்கறாங்க.அதுக்கு பதில் நம்மகிட்டயும் இல்ல. ஸ்மார்ட் கிளாஸ் வந்துரும்னு ரெடியாக இருக்க சொன்னாங்க. இப்ப காலாண்டும் முடிஞ்சுது, ஸ்மார்ட் கிளாஸ் வரல. இன்னும் பாதி பள்ளிகள்ல இணைய வசதியே இல்லைனு சொல்றாங்க.ஏன் இணையவசதி இல்லைனு கேட்டா, அதுக்கு கல்வி துறையிலிருந்து எந்த பதிலும் இருக்காது. எப்ப வரும்னு தெரியாம, பெற்றோர் கிட்ட என்ன பதில் சொல்றது. இப்படியே போச்சுனா அடுத்த வருஷம் அட்மிஷன் போடும் போது, பெற்றோரை சமாளிக்க முடியாது. இதையெல்லாம், கல்வித்துறை அதிகாரிக கவனிக்கணும், என, ஆதங்கத்தோட சொன்னாங்க. செக்போஸ்ட்ல எஸ்.பி., ரகசிய ஆய்வு
பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நடுப்புணி செக்போஸ்டுல போலீசார் எல்லாரும் வெலவெலத்து போயிட்டாங்கனு, பேச ஆரம்பிச்சாரு.நடுப்புணி செக்போஸ்ட்ல திடீர்னு எஸ்.பி., ஆய்வு செய்ய வர்றாருனு தகவல் பரவுச்சு. போலீசார் எல்லாரும் உஷாரா இருந்தாங்க. இவரு செக்போஸ்ட்ட கடந்து போய் நின்னுட்டு, என்ன நடக்குதுனு நோட்டம் விட்டிருக்காரு. அப்ப, அங்கு வந்த கோழி வண்டிக்காரங்க, வழக்கம் போல பணத்தை நீட்டிட்டு நகர்ந்து இருக்காங்க.உடனே, அங்கு வந்த எஸ்.பி., கோழி வண்டிக்காரங்கள அழைச்சு விசாரிச்சு, இனி இதுபோல பணம் கொடுக்க கூடாதுனு 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. போலீஸ்காரங்களையும் லெப்ட், ரைட் வாங்கியிருக்காரு. ரெண்டு நாள் கழிச்சு, மறுபடியும் செக்போஸ்ட் வந்து கண்காணிச்சிருக்காரு.அதனால, போலீஸ்காரங்க எல்லாரும் வெலவெலத்து போயிருக்காங்க.செக்போஸ்ட் வசூல் பத்தி, அவருக்கு நிறைய புகார் போனதால இப்படி ஆய்வு பண்ணியிருக்காராம். அப்படியே சேவல் சண்டை, சூதாட்டம் நடத்தி போலீஸ்காரங்க கமிஷன் வாங்குறாங்களானு ரகசிய ஆய்வு செய்தா நல்லா இருக்கும்னு, நண்பர் சொன்னாரு. அரசு ஒதுக்கற நிதி எங்க போகுது!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் ஒருத்தரு கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். பஸ் எப்படி இருந்தாலும் டிப்போவுல கண்டுக்க மாட்டீங்கறாங்கனு டிபார்ட்மென்ட் பிரச்னைய சொல்ல துவங்கினார்.பொள்ளாச்சி -- கோவை இடையே அதிகப்படியான அரசு பஸ்கள் இயங்குது. அவ்வப்போது பஸ்சுல ஏதாவது பழுது ஏற்பட்டா, அதனை சரி செய்யவோ, மாற்றுப் பொருள் பொருத்தவோ பணிமனையில நடவடிக்கை எடுக்கறதில்லைனு, டிரைவர், கண்டக்டர்கள் புலம்புறாங்க.கோவைக்கு இயக்கற டி.என். 38 என் 3235 என்ற பஸ்சோட முகப்பு கண்ணாடி விரிசல் விழுந்தும், அதைய மாற்றாம அப்படியே இயக்கறாங்க. இத பத்தி பயணிக கேள்வி எழுப்பினாலும் சரியான பதில் கிடைக்காததால அச்சத்துடன் பயணிக்கறாங்க.இதே மாதிரி டி.என். 38 என் 3279 என்ற எண்ணுள்ள பஸ்சில் முகப்பு விளக்கு வெளிச்சம் இல்லாம இயக்கப்பட்டது. டிரைவர், கண்டக்டர் சொந்த செலவுல எல்.இ.டி., பல்பு வாங்கி மாட்டி, பஸ்சை இயக்கிட்டு இருக்காங்க. அரசாங்கம் ஒதுக்கற நிதியெல்லாம் எங்க போகுதுனு தான் தெரியல, என்றார். பேரிடர் மீட்பு பணி எப்படி இருக்குமோ!
பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோட்டுல, நண்பருடன் டீ சாப்பிட்டு கொண்டிருந்தேன். அங்கு வந்த தன்னார்வலர் ஒருத்தரு, என்னங்க... அதிகாரிக இப்படி இருக்காங்கனு பேச ஆரம்பித்தார்.பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்துல, பேரிடர் மேலாண்மை கூட்டம் நடப்பதா அழைப்பு விடுத்தாங்க. சாயங்காலம் நாலு மணிக்கு கூட்டம்னு சொல்லியிருந்தாங்க. நாங்களும் முன்கூட்டியே போயிட்டோம்.ஆனா, ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அதிகாரிக யாருமே வரல. முக்கிய அதிகாரி ஒருத்தரு, அஞ்சேமுக்கால் மணிக்கு சாவுகாசமா வந்தாரு. அப்ப, தன்னார்வலர்கள் பாதி பேர் கிளம்பி போயிட்டாங்க.அந்த அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள பார்த்து, என்னப்பா கூட்டம் குறைவா இருக்குனு கேட்டாரு. கூட்டத்துக்கு வந்திருந்த தன்னார்வலர்கள் காத்திருந்தாங்க. ஒரு மணி நேரத்துக்கு மேலானதால கிளம்பி போயிட்டாங்கனு சொன்னாங்க.அதுக்கு அந்த அதிகாரி, 'கையெழுத்தாவது வாங்கினீங்களா' என கேட்டாரு. அப்பத்தான் தெரிஞ்சுது, இது சம்பிராதய கூட்டம்னு. கூட்டம் நடந்துச்சுன்னு கையெழுத்து மட்டும் போடுவதற்கு எதுக்கு கூட்டம்னு கேட்டுட்டு நாங்களும் கிளம்பிட்டோம். இப்படி இருந்தா, மழை காலத்துல பேரிடர் மீட்பு பணி எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்கனு சொன்னார்.
காஞ்சு கிடக்குது குளம்; ஆளுங்கட்சி பாராமுகம்!
நம்ம ஆட்சி வந்தாலே, விவசாயிகள் கிட்ட நல்ல பேரு வாங்கறது பெரும்பாடா இருக்குது என, கரைவேட்டி கட்டிய உடன்பிறப்புகள், உடுமலை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் புலம்பிக்கொண்டிருந்தனர். என்னவென்று காது கொடுத்து கேட்டேன்.அ.தி.மு.க., ஆட்சியில, பி.ஏ.பி., பாசன காலத்துல, கிராம குளங்களுக்கு கால்வாய்ல இருந்து தண்ணீர் திறந்து விட்டு நிரப்பறது வழக்கமா இருந்துச்சு. இதனால, நிலத்தடி நீர்மட்டம் சரியாம விவசாயிகளுக்கு கைகொடுத்துச்சு.நம்ம ஆட்சியில, ஒரு தடவ கூட கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுக்கல. போன வருஷம் மழை இல்லாம விவசாயம் பாதிச்சது; குடிநீர் பிரச்னையும் அதிகமா இருந்துச்சு, அப்ப கூட குளத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்துட்டாங்க. இப்ப எல்லா குளமும் தண்ணீர் இல்லாம காஞ்சு கிடக்குது.சில இடத்துல போராட்டம் நடத்தியும் பலனில்ல. கட்சிக்காரங்க, அதிகாரிங்ககிட்ட பிரஷர் கொடுத்தும் ஒரு வேலையும் நடக்கல.மழை சரியா பெய்யாட்டி, எப்படி குளத்துக்கு தண்ணீர் கொடுப்பாங்கன்னு விவசாயிகிட்ட கேட்டா, 'உங்க அமைச்சர் அவங்க ஏரியாவுக்கு மட்டும், தேவையான தண்ணீரை கொண்டு போயிராரு; உப்பாறுக்கு தண்ணீர் கொடுக்கறாங்க.ஆனா, பழைய ஆயக்கட்டு பகுதியில இருக்கற குளத்துக்கு தண்ணீர் கொடுக்கறதில்ல' அப்படின்னு நம்மள கேள்வி கேட்கறாங்க.இந்த ரெண்டாம் மண்டல பாசன காலத்துல, குளங்களுக்கு தண்ணீர் கொடுக்கலைனா, வர்ற உள்ளாட்சி தேர்தல்ல நாம ஓட்டு கேட்டு போறது சிரமம்தான், என, பேசியவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.