ரிப்போர்ட்டர் லீக்ஸ்
அபீசியல் மீட்டிங்கில் கட்சிக்காரங்க!
கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ்க்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, அலுவலகத்தினுள் இருந்த பொதுமக்கள், ஆளுங்கட்சிக்காரங்க இப்படி பண்ணக்கூடாதுனு பேசிக்கிட்டாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன்.போன வாரம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினாங்க. இதுல பொள்ளாச்சி எம்.பி., மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. தி.மு.க., கட்சிக்காரர்களும் வந்திருந்தாங்க. இப்போ தலைவர் பதவிக்காலம் முடிஞ்சு போச்சு, ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிக இணைஞ்சு ஊராட்சியை பார்த்துக்க போறாங்க.இந்த நிகழ்ச்சியில, அரசு அதிகாரிக மற்றும் பணியாளர்கள் மட்டும்தான் கலந்துக்கணும். கட்சிக்காரர்களுக்கு யார் அனுமதி கொடுத்தாங்கனு தெரியல. இத பார்த்த அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்காரங்கள மீறி எதுவும் பண்ண முடியாதுனு கண்டுக்காம இருந்துட்டாங்க.அடுத்த ஊராட்சி தேர்தல் வரைக்கும், ஆளுங்கட்சிக்காரங்க உள்ளாட்சியில 'பவர்' காட்டுவாங்க. அவங்கள மீறி எதுவுமே நடக்காதுனு, நொந்து கொண்டனர். பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போ, நீலக்கலரு, மஞ்சக்கலருல புதுசு புதுசா அரசு பஸ்கள் வந்தன. பஸ் சூப்பரா இருக்குனு பேசிக்கிட்டு இருந்தோம். அங்கிருந்த அரசு பஸ் ஊழியர்கள் சிலர், பஸ்சை பார்த்து ஏமாந்து போகாதீங்கனு, பகீர் தகவல்களை அவிழ்த்து விட்டனர். அதிலிருந்து...பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில, மறு பாடி கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் அரசு பஸ்கள் வெளியே வருது. நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் பளிச்சுனு இருக்கும். தனியார் பஸ்களுக்கு போட்டியாக வடிவமைச்சிருக்காங்க. பயணியரும் போட்டி போட்டு இந்த பஸ்கள்ல ஏறுறாங்க.என்னதான் பாடி கட்டி இயக்கினாலும், தளவாடப் பொருட்கள் பழசா இருக்கறதுனால பஸ் மக்கர் பண்ணுதுங்க. போன, 30ம் தேதி செம்மணம்பதிக்கு சென்ற (டிஎன் 38 என் 3180) பஸ் ஸ்பிரிங் பெட் உடைஞ்சு, பணிமனைக்கு எடுத்துட்டு வந்தாங்க.போன, 1ம் தேதி கோவைக்கு சென்ற (டிஎன் 38 என் 3084) புது பஸ் சுந்தராபுரம் அருகே சிட்கோவில், ஸ்பிரிங் பெட் உடைஞ்சு நின்னுறுச்சு. டிரைவரோட சாமர்த்தியத்தால, பெரும் பாதிப்பும் தப்பியது. மறு பாடி கட்டிய பஸ்சை இயக்க நினைத்தாலே பயமாக இருக்குங்கனு, உள்ளதை உள்ளபடி சொன்னாங்க. ஆட்டோவுக்கு பர்மிட் கொடுங்க சார்!
வால்பாறையில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கு பஸ் ஸ்டாப்புல காத்திருந்த இருவர், ஆட்டோ பர்மிட் மேட்டரை பேசிக்கிட்டிருந்தாங்க.வால்பாறையில, 100 ஆட்டோக்கள் ஓடுச்சு. உள்ளூர் மக்களும், டூரிஸ்ட்களும் சவாரி செய்ய வசதியாக இருந்துச்சு. ரெண்டு வருஷமா, 40 ஆட்டோக்கள் ஓடுல. இப்ப, மிக குறைவான ஆட்டோக்களே ஓடுது. இந்த நேரத்துல, கூடுதலா, 50 ஆட்டோக்கள் இயக்க மாவட்ட கலெக்டர் கடந்த ஆண்டு அக்டோபர் மாசம் உத்தரவு போட்டாரு.ஆனா, இங்க இருக்கற ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர், அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதனால, புதுசா ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்கக்கூடாது. பர்மிட் வழங்குவதை கலெக்டர் நிறுத்தி வைக்க வேண்டும்னு மனு கொடுத்தாங்க. மாவட்ட கலெக்டரும் புதுசா ஆட்டோ பர்மிட் வழங்குறத தற்காலிமாக நிறுத்தி வச்சிருக்காரு.இங்க, ஆட்டோவுக்கு தாறுமாறா கட்டணம் வாங்கறாங்க. எல்லா விதிமீறலும் இருக்கு. புதுசா யாரும் ஆட்டோ ஓட்டக்கூடாதுனு நெனச்சு தடுக்கறாங்க. இதுமட்டுமில்லாம, 'நாங்க யாருனு தெரியுமா, கலெக்டரு போட்ட உத்தரவையே நிறுத்தி வைக்க வச்சுட்டோம். எங்கள தாண்டி இங்க ஆட்டோ பர்மிட் கொடுத்திடுவாங்களானு, சட்டை காலரை துாக்கி விட்டுட்டு சுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. கிராமத்துல ஈஸியா கிடைக்குது குட்கா!
உடுமலை, ஏரிப்பாளையம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே வெயிலுக்காக ஒதுங்கினேன். அங்கு, இரு தொழிலாளர்கள், சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர்.அவர்கள் பேசியதில் இருந்து...உடுமலை டவுனுக்குள்ள, நமக்கு தேவையான குட்கா பொருள் கிடைக்கறது கஷ்டமாக இருக்குது. கிராமத்துல அவ்வளவு டைட்டா யாரும் ரெய்டு போறது இல்லை. அதனால, ரெகுலர் கஸ்டமர்களுக்கு, டவுன் சப்ளையருங்க கிராமத்துல எங்க பொருள் விற்குதுன்னு சொல்லிறாங்க. அங்க போய் வாங்கிட்டு வர வேண்டியது இருக்கு. சில கிராமத்து கடையில ஓபனாவே குட்கா விக்கறாங்க. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், மற்ற அதிகாரிங்கள கரெக்டா கவனிச்சுக்கறாங்க.இதனால, பெருசா ரெய்டு எதுவும் நடக்கறது இல்லை. நாம தான் சிரமப்பட்டு, கிராமத்துக்கு போய் கூடுதல் விலைக்கு குட்கா வாங்கிட்டு வர வேண்டி இருக்கு.குறிப்பாக, பிற மாநில தொழிலார்கள் வேலை பார்க்கற பகுதிய தேர்வு செஞ்சு, அங்க அனைத்து விதமான குட்கா பொருளையும் விற்கிறாங்க. மொபைல்போன்ல முன்னாடியே புக் பண்ற திட்டத்தையும் செயல்படுத்திட்டு இருக்காங்க. சம்பாதிக்கற காசுல, இதுக்கே பாதிய செலவு பண்றாங்கனு, பேசிக்கிட்டாங்க. மரத்தை வெட்டி விற்றது யாரு சார்?
பொள்ளாச்சி முனிசிபாலிட்டி பக்கத்துல நண்பருடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அங்கு வந்த ஆளுங்கட்சியினர், நகராட்சி கூட்டத்துல இப்படியா பேசறதுனு சொன்னது, காதில் விழுந்தது. என்ன விஷயம்னு கவனித்தேன்.என்னப்பா, நம்ம கட்சிக்காரங்களே இப்படி மாறி, மாறி பண்ணுறாங்க. அதுல ஒருத்தரு நான் தான் மரத்தை வெட்டிட்டேன்னு பேசினது ஓவராக இருக்கு. எப்பவுமே பேசாத ஒருத்தரு, சார் குப்பையெல்லாம் எரிக்கிறாங்க; எரிக்கிறாங்கனு பேசிக்கொண்டே இருந்தார்.அப்ப, சொர்ணபுஷ்பம் காலனி பூங்காவில் இருந்த மரங்களை வெட்டி, எரித்தது யாருன்னு தெரியுமானு கமிஷனர் கேட்டதும், ஒரு கவுன்சிலர், நான் தான் மரத்தை சொந்த செலவுல வெட்டினேன். அங்கிருந்த மரக்கழிவை நான் தான் எரித்தேன்னு, உண்மைய ஒத்துக்கிட்டாரு.நகராட்சி சொத்தை எப்படி விற்கலாம், எரிக்கலாம்னு அதிகாரிக கேட்டாலும், திரும்ப திரும்ப அதே பதில சொல்லி, கவுன்சில் கூட்டத்துல சிரிப்பலைய ஏற்படுத்திட்டாரு.எப்பவுமே பேசாதவங்க, திடீர்னு பேசினா, இப்படி தான், தாறுமாறா பேசி, நம்ம மேலயே சேற்றை பூசிக்க வேண்டிருக்கும். இதெல்லாம் தலைமைக்கு தெரிஞ்சா என்னாகும்னு பேசிக்கிட்டாங்க.
சூரிய அஸ்தமனத்துல பாசனத்துக்கு நீர் திறக்கலாமா?
திருமூர்த்தி நகரில் இருந்து வரும் போது, தளி ரோட்டில் நண்பருடன் பேசிக்கிகொண்டிருந்தேன். அங்கு வந்த, விவசாயிகள் ஆதங்கமா பேசிக்கிட்டிருந்தாங்க. என்னனு விசாரிச்சேன்.பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு, கடந்த, 29ம் தேதி தண்ணீர் திறந்தாங்க. தை அமாவாசையில தண்ணீர் திறந்தால், விவசாயம் செழிக்கும்னு, திட்டக்குழு, விவசாயிகள், அதிகாரிகள் முடிவு செஞ்சு அரசு ஆணையும் வாங்கினோம்.திருமூர்த்தி அணையிலிருந்து சூரிய உதயத்தின் போது, நீர் திறந்தா நல்லா இருக்கும்னு விவசாயிக எதிர்பார்த்தோம். ஆனா, அமைச்சருக்காக, தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியமாலை நேரத்துக்கு அதிகாரிக மாத்திட்டாங்க.தி,மு.க., ஆட்சிக்கு வந்ததுல இருந்து, திருமூர்த்தி, அமராவதி அணைகளில் இருந்து, ஒவ்வொரு முறையும் பாசனத்திற்கு பகலில் நீர் திறக்காம, சூரிய அஸ்தமனம் ஆகற சாயங்கால நேரத்துல திறக்கறாங்க. இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளதோடு, கடந்த முறை நிகழ்ச்சியில கலந்துக்காம புறக்கணிச்சுட்டாங்க.சாயங்காலத்துல நீர் திறந்தா, கால்வாயில எங்கு அடைப்பு ஏற்படும், உடைப்பு ஏற்படும்னு தெரியாது. விவசாய நிலங்களுக்குள் நீர் புகும் அபாயமும் இருக்கு. அதனால, காலை நேரத்துல நீர் திறக்கணும்னு ஒவ்வொரு முறையும் சொல்லிட்டு இருக்கோம்.ஆனா, விவசாயிகளுக்காக திறக்கற நீரை, விவசாயிக சொல்லற மாதிரி திறக்காம, அமைச்சரோட இஷ்டத்துக்கு திறக்கறாங்க. விடியல் ஆட்சியில, சாயங்காலத்துல தான் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கணுமா, விவசாயிகளோட மனவேதனைய புரிஞ்சுக்கிட்டு, அமைச்சர் மாத்தி யோசிக்கணும்னு, ஆதங்கத்தை கொட்டினாங்க.