உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

'பார்'ல இருந்து நேரடி சப்ளைபோலீசாருக்கு இல்ல கவலை

'வாட்டர் பாட்டில்' முதற்கொண்டு டாஸ்மாக் பாரில் இருந்துதான் போகுதாம் என்றபடி குடிமங்கலம் நால்ரோட்டில் இரு பெருசுகள் புலம்பிக்கொண்டிருந்தனர். திடீர் மழைக்கு ஒதுங்கிய நாமும் காது கொடுத்து கேட்டோம்.நம்ம ஏரியாவுல, இருக்குற டாஸ்மாக் 'பார்' எதுவும், ரூல்ஸ்படி நடக்கிறது இல்லை. சில 'பார்'ல, மது சில்லிங் விற்பனையும் தாராளமா நடக்குது. இரவிலும், காலை நேரத்திலும், 'சரக்கு' பதுக்கி வைச்சு அதிக விலைக்கு விற்கிறாங்க.இதனால, தொழிலாளர்கள் பலர் குடிபோதையிலேயே சுத்தறாங்கனு, திருப்பூர் எஸ்.பி.,க்கு புகார் போயிருக்கு. அப்படி இருந்தும் குடிமங்கலம் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கறது இல்லை.காரணம் என்னான்னா, டெய்லியும் 'பார்' மூலமா போலீசுக்கு 'கவனிப்பு' செய்றாங்கா. சில நேரத்துல, வாட்டர் பாட்டில் முதற்கொண்டு பாரில் இருந்துதான் போலீஸ்காரங்களுக்கு சப்ளை ஆகுதாம். இதனால, எந்த விதிமீறலையும் அவங்க கண்டுக்கறது இல்லை.ரவுண்ட்ஸ் போற போலீசுக்கும் தனியா 'கவனிப்பு' நடக்குதாம். நாள் முழுக்க சரக்கு விற்கறதால, பெரியளவுல ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ, குற்றச்சம்பவமோ நடக்க போகுது. அப்ப என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

அங்கன்வாடிக்கு ஆய்வுக்கு போனாமொட்டை பெட்டிஷன் போடுறாங்க

வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் பயந்துக்கிறாங்க, என, பஸ் ஸ்டாண்டில் முதியவர்கள் பேசிக்கொண்டனர். என்ன, விஷயம்னு கவனித்தேன்.வால்பாறையில, 43 அங்கன்வாடி மையங்கள் இருக்கு. அதுல, 70 சதவீதம் வெளிமாநிலத்தவர் குழந்தைகள் தான் இருக்காங்க. திட்ட அலுவலராக இருந்தவங்க, போன வருஷம் டிரான்ஸ்பர்ல போயிட்டாங்க.இதனால, ஆனைமலை திட்ட அலுவலர் கூடுதல் பொறுப்பா வால்பாறையையும் கவனிச்சுட்டு இருக்காங்க. அவங்களால, ரெண்டு தாலுகாவையும் கவனிக்க முடியல.இந்த நிலைமையில, அதிகாரிகள் அங்கன்வாடி மையத்துக்கு ஆய்வுக்கு போகும் போது, சில மையங்கள்ல, பணியாளர்கள் இருப்பதில்லையாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மையமும் திறக்கறதில்லைனு, புகார் வந்திருக்கு.இதை தட்டிக்கேட்ட அதிகாரி மீது, புகாருக்குள்ளான பணியாளர்கள் சிலர் மொட்டை கடிதாசி போட்டு மிரட்டுறாங்க. கோவையில இருந்து வந்த உயர்அதிகாரிகள் நேரடி விசாரணையும் நடத்தினாங்க. ஒரு சிலரால, அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் பாதிக்கறாங்க.மொட்டை பெட்டிஷன் அனுப்பறதால, ஆய்வுக்கு போகவே அதிகாரிக பயப்படுறாங்க. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வால்பாறைக்கு திட்ட அலுவலர் நியமிக்கணும்னு, பேசிக்கிட்டாங்க.

கல்குவாரியில கேரளா முதலீடுஇவங்க ரியல் எஸ்டேட்ல முதலீடு

கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்துக்கு போயிருந்தேன். அங்கு ரெண்டு விவசாயிகள், கல்குவாரி பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன். அவங்க பேசியதில் இருந்து...இப்போ, கிணத்துக்கடவு பகுதியில இருக்கும் கல்குவாரி உரிமையாளர்கள்சிலர், தங்கள் குவாரியை கேரளாவை சேர்ந்தவங்களுக்கு உள் வாடகைக்கும், லீசுக்கும் விட்டுருக்காங்க. இதுல, ஒரு பெரிய தொகையை வாங்கி இருக்காங்க.அந்த பணத்தை அப்படியே வச்சிருந்தா 'இன்கம் டேக்ஸ்' பிரச்னை வரும்னு, எல்லாரும் ரியல் எஸ்டேட் பண்ண துவங்கிடாங்க. இதுல எக்கச்சக்கமா வருமானம் இருக்குறதால, அவங்க சொந்த ஊர விட்டுட்டு பக்கத்து ஊர்களில் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.கல்குவாரியில, ஆட்கள் வச்சு கல் உடைச்சும் விற்கறாங்க. அதுலயும் அவங்களுக்கு வருமானம் கிடைக்குதாம். கேரளாகாரங்க கிட்டவே கல்குவாரி போயிட்டதால, உள்ளூர் விற்பனைய காட்டிலும், கேரளாவுக்கு கனிமவளத்தை கொண்டு போக அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்களாம். இனிமேல், நாம வீடு கட்டணும்னா கூட கேரளாகாரங்க கிட்ட தான் கல்லு, மண்ணு வாங்கணும்னு பேசிக்கிட்டாங்க.

தினமும் நிரம்புது பாக்கெட்ரோட்டோர கடைகளே டார்கெட்!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், நண்பரை சந்திக்க சென்றேன். அங்கிருந்த இருவர் பேசிக்கொண்டதில் இருந்து...உடுமலையில, பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு, கால்நடை மருத்துவமனை முன், ராஜேந்திரா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, உழவர் சந்தை, ராமசாமி நகர் ரோடு சந்திப்பு என எல்லா இடத்திலும், ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசல் போல பெருகியிருக்கு.இதனால, போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரிச்சுட்டு இருக்கு. இது குறித்து நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் யாருமே கண்டுக்கறதில்ல.பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஆக்கிரமிப்பு அதிகரித்த நிலையில, நகராட்சி அதிகாரிகள் தினமும் குறிப்பிட்ட தொகையை வாடகையாக வசூலிக்கறாங்க. அதே போல், ரோட்டோரங்களிலும் ஆளும்கட்சி பிரமுகர்கள் 'ஆசி'யுடன், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் 'கவனிப்பு' பெற்று, ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கறாங்க.தினமும், பல்லாயிரக்கணக்கான ரூபாய் முறைகேடாக அதிகாரிகளுக்கு வருவாய் வருவதால், நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிச்சிருக்கு. மக்கள் பாதிப்பதோடு, விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்படுது. இதை யாருமே கண்டுக்கறதில்ல, என, பேசிக்கொண்டனர்.

ஆளுங்கட்சிக்கு விசுவாசம் காட்டுறாங்கபா.ஜ.,வினர் மேல கேஸ் போடுறாங்க

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நண்பருக்காக காத்திருந்தேன். அங்கிருந்த பா.ஜ., கட்சிக்காரங்க, ஆதங்கப்பட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.பொள்ளாச்சியில, மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து, தி.மு.க.,காரங்க ஆர்ப்பாட்டம் செய்தப்ப, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாங்க. நாங்க (பா.ஜ.,) போராட்டம் நடத்தினா, கைது பண்ணுறாங்க. கோஷம் போடக்கூட விடுல. ஆர்ப்பாட்டத்துக்கு அசம்பிள் ஆனதும், குண்டுக்கட்டா கைது பண்ணிட்டாங்க. இது, ஜனநாயக நாடான்னு தெரியல.போலீஸ்காரங்க, ஆளுங்கட்சிக்கு சப்போர்ட் பண்ணலாம்; அதுக்காக... இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுங்க. எங்க ஆளுக சிலரை கைது பண்ணி மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்தி ஜெயில்ல அடைக்க முயற்சி பண்ணிணாங்க.மாஜிஸ்திரேட், வீடியோல இருக்குறவங்க இங்க இல்ல; போலீசை அடிச்சதா சொன்னீங்க. அவங்க எங்கனு கேட்டு இருக்காரு; அப்புறம் போலீசார், பாதிக்கப்பட்ட போலீசுக்கு வீடியோ கால் பண்ணி மாஜிஸ்திரேட் கிட்ட காட்டினாங்க. அதுக்கப்புறம், எங்கள ஜாமின்ல விட்டுட்டாங்கனு, சொன்னாங்க.

மக்கள்தொகை குறைஞ்சு போச்சுமாணவர் சேர்க்கை சிக்கலாயிச்சு

மார்ச் மாசம் வந்தாலே, அரசு பள்ளிகள் எல்லாம் பரபரப்பா இருக்கும். இந்த வருஷம் அந்த பரபரப்பு இல்லை. ஆனாலும், பரபரப்பு இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டியிருக்குனு, உடுமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை துவங்கச்சொல்லி, கல்வித்துறை உத்தரவு போட்டிருக்கு. கல்வித்துறை வேற போன வருஷம் மாதிரி இந்த முறையும் அதிக மாணவர் சேர்க்கையை உறுதி பண்ணனும் சொல்லியிருக்கு.சரி நாமும் ஒவ்வொரு வீட்டுக்கும், நுாறு நாள் வேலை செய்யற இடத்துக்கும் போய், பெற்றோரை பார்த்தா, அவங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க. இருக்கிற ஒரு குழந்தைய போன வருஷமே பள்ளிக்கூடத்துல சேர்த்தாச்சு. இப்ப இன்னொன்னு இருந்தாதானே கொண்டு வந்து சேர்ப்பதற்கு என, நக்கல் பண்ணுறாங்க.மக்கள்தொகை குறைஞ்சுட்டு இருக்குனு, கல்வித்துறைகிட்ட நம்ம சொல்ல முடியுமா... முடியாதே. எங்களுக்கு இலக்குதான் முக்கியம்னு கல்வித்துறை கணக்குப்போட்டு கடைசில ஆசிரியர்கள் தான் பணிசுமையோடு, மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்னு, புலம்பினர்.

மாவட்ட விவகாரத்துல மவுனம் காக்கும் எம்.பி.,!

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்துல, நண்பருடன் 'வாக்கிங்' சென்றேன். அப்ப, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கணும்னு பரபரப்பாக பேசிட்டு இருக்காங்கனு, பேச ஆரம்பிச்சாரு.ஊர்ல இருக்குற அமைப்புகள் எல்லாம் இப்ப தான், மாவட்ட பிரச்னையை சீரியஸாக கையில் எடுத்து இருக்காங்க. உடுமலை, மடத்துக்குளத்தை பழநியோட சேர்ப்பதை அந்த ஊர்காரங்க கூட விரும்பல.தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முதல்வருக்கு மனு அனுப்பி மாவட்டமாக்க வலியுறுத்தியிருக்காரு. அரசியல் கட்சியினரும் கூட்டம் நடத்தி அரசுக்கு அழுத்தும் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக குரல் கொடுத்தாலும், நம்ம ஊரு எம்.பி., மட்டும் இது பற்றி எந்த கருத்தும் சொல்லாம மவுனமா இருக்காரு. அதுனால, சமூக வலைதளங்களில் எம்.பி., பற்றி தாறுமாறா விமர்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க.தேர்தல் நெருங்கும் நேரத்துல, பழநி மாவட்டம் வேண்டும்னு குரல் கொடுக்கற அமைச்சரோட ஆதரவுல தான், இவருக்கு 'சீட்' கிடைச்சது. அதனால, அமைச்சர் முயற்சிக்கு தடையாக இருக்க கூடாதுனு அமைதியாக இருக்காருன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. பழநியோ, பொள்ளாச்சியோ எனக்கு இன்னும் நாலு வருஷம் பதவி இருக்குனு தெம்பா சுத்தராருனு, ஆளுங்கட்சிக்காரங்களே விமர்சனம் பண்ணுறாங்கனு, சொன்னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை