உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லிக்ஸ்

ரிப்போர்ட்டர் லிக்ஸ்

பாறைய தகர்க்க வெடி வைக்கறாங்க; விவசாயி புகாருக்கு ரெஸ்பான்ஸ் இல்ல

கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றிருந்தேன். அங்கு இருவர் கல்குவாரி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களது உரையாடலில் இருந்து... நெ.10.முத்தூர் கிராமத்துல தனியாருக்கு சொந்தமான செயல்படாத பாறைக்குழி இருக்கு. இதன் மேல் பகுதியில் பெரிய பாறை இருப்பதால், அதை வெடி வைத்து தூள் தூளாக்கி, அதை பாறை குழியில போட்டு மூடத் திட்டமிட்டாங்க. இதுல, முதல் நாள் வெடி வச்சு கொஞ்சம் தகர்த்தாங்க. அடுத்த நாள் மீண்டும் இதே வேலையை செஞ்சாங்க. ஆனா, இந்தப் பாறைக்கு பக்கத்தில் இருக்கிற விவசாயி ஒருவர் சட்டவிரோதமா பாறைக்கு வெடி வைக்கறாங்கன்னு, போலீசுல இருந்து, கனிமவளத்துறை வரைக்கும் எல்லாத்துக்கும் புகார் பண்ணிட்டாரு. தாசில்தார் நேரில் வந்து ஆய்வு பண்ணினார். ஆனா, இதையெல்லாம் மீறி மறுபடியும் வெடி வைக்க வேலை நடந்துட்டு இருக்கு. தப்புன்னு தெரிஞ்சும் தைரியமா பாறைக்கு வெடி வைக்கறாங்க. இத பத்தி அந்த விவசாயி மறுபடியும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு போன் பண்ணி தகவல் சொல்லியிருக்காரு. அதிகாரிகளோ நேர்ல வந்து ஆய்வு பண்றோம்னு சொல்லி இருக்காங்க. இப்படி பல தடவை அதிகாரிக சொல்லியிருக்காங்க, ஆனா ஆய்வு பண்ணுறதில்ல. கவனிப்புக்கு உள்ளாகற அதிகாரிங்க எப்பவுமே, மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்வாங்கனு பேசிக்கிட்டாங்க.

அரசு நிலமெல்லாம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மவுனம் கலையுமா?

வால்பாறை நகரில் சமீபகாலமாக கவர்மென்ட் இடத்தை ஸ்வாகா பண்ணுறாங்க. அரசு அதிகாரிக கண்டுக்க மாட்டீங்கறாங்கனு இளைஞர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன். சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரம் ஒரு கி.மீ., சுற்றளவில் அமைஞ்சிருக்கு. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 6.5 ஏக்கருல இருக்கு. பள்ளி இடத்த ஆக்கிரமித்து, நகராட்சி பஸ் ஸ்டாண்ட், கண்ணாடி மாளிகை கட்டியிருக்காங்க. பள்ளிகளுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்க, பள்ளி வளாகத்தில் நகராட்சி சார்பில் சமையல் கூடம் கட்டியிருக்காங்க. பள்ளிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்த, வேறு துறைகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கு. வால்பாறை கோ-ஆப்ரெடிவ் காலனியில் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிக்கு சொந்தமான இடத்தையும், நகராட்சிக்கு சொந்தமான இடத்தையும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருக்காங்க. வால்பாறையில, அரசு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களிடம் இருந்து மீட்டு, அரசு அலுவலகம், அரசு ஊழியர்களுக்கான தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கலாம். உயர்அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்னு பேசியபடி அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

'உளி படாத கல் சிலையாகாது... வலி இல்லாத வாழ்க்கை வளமாகாது

' பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில், பேக்கரியில் நண்பரை சந்தித்தேன். 'நாம படிக்கற காலத்தில எல்லாம், படிக்கலைனாவோ, தப்பு பண்ணினாவோ, உடம்புல கண்ண மட்டும் விட்டுட்டு தோல உறிச்சுடுங்கனு' பெத்தவங்க சொல்லுவாங்க. ஆசிரியர்கள கண்டால் நாமும் மரியாதையா நடந்துக்குவோம், அவங்கள பார்த்தாலே பயப்படுவோம். இப்ப, காலம் மாறிப்போச்சு,' பேச ஆரம்பித்தார். பழைய கதைய எல்லாம் விடு, இப்ப என்ன பிரச்னைனு சொல்லுனு விசாரிச்சேன். நண்பர் கூறியதில் இருந்து... ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி நல்வழிப்படுத்துறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏன்னா, அடித்தாலோ, மிரட்டினாலோ போலீஸ் 'கேஸ்' ஆகிடுது, இல்லைன்னா பெற்றோர் பள்ளிக்கு வந்து சண்டை போடுறாங்க. சமீபத்துல, கஞ்சம்பட்டி பள்ளியில ஆசிரியர்கள் கண்டிச்சதுக்கு, சாணிப்பவுடரை கரைச்சு குடிச்சு மூனு மாணவியர் தற்கொலை முயற்சித்தாங்க. இத பார்த்த ஆசிரியர்கள், நமக்கு ஏன் வம்பு; அவங்க என்ன பண்ணினா நமக்கென்னன்னு இருக்க வேண்டியது தான் என புலம்புறாங்க. இப்படியே போனா, நாளை சமுதாயம் சரியான பாதையில எப்படி போகும். தப்பு செஞ்சாலோ, படிக்கலைனா கண்டிக்கனும். உளி படாத கல் சிலையாகாது, வலி இல்லாத வாழ்க்கை வளமாகாதுனு அந்த காலத்துல சொன்னாங்க. அது தான் இன்னைக்கும் பொருந்தும்னு ஆசிரியர்கள் ஆதங்கப்படுறாங்க. இதுக்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒரு குழு அமைச்சு, பெற்றோரையும் வரவழைச்சு அவங்க முன்னாடியே விசாரிக்கணும்னு சொல்லி முடித்தார்.

கழிவு கொட்டுற இடமான கிராம சாலைகள்; போராட்டம் நடத்த முடிவு பண்ணிட்டாங்க

கொளுத்துற வெயிலுக்கு இளைப்பாற, பொள்ளாச்சி ரோட்டில் அந்தியூர் அருகே மரத்தடியில் ஒதுங்கியிருந்த இளைஞர்கள் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதிலிருந்து... நான்கு வழிச்சாலை வேலைகள் முடிஞ்சதும் இந்த வழியா வர வேண்டியதில்ல. பை-பாஸ்ல பறந்துறலாம்னு ஒருத்தர் சொல்ல, இன்னொருத்தரு 'அதெல்லாம் சரி இந்த பக்கம் வந்தாலே ஒரு மாதிரி துர்நாற்றம் வீசுது என்னன்னு தெரியல,' என்றார். அதற்கு மற்ற இளைஞர், கேரளா உள்ளிட்ட இடங்கள்ல இருந்து பல்வேறு கழிவ கொண்டு வந்து, ராத்திரி நேரத்துல கொட்டிட்டு போறாங்க. ஒரே இடத்துல கொட்டுனா சிக்கலாகும்னு, அந்தியூர்ல இருந்து கிராமங்களுக்கு போற ரோட்டுல பரவலாக கொட்டுறாங்க. அதுல, ஏதாவது அபாய கழிவு இருந்தா என்னாகும்னு தெரியல. இதையெல்லாம் கண்காணிக்க முதல்ல, இங்க போலீஸ் செக்போஸ்ட் இருந்துச்சு. இப்ப அந்த செக்போஸ்ட் பணிக்கு போலீஸ்காரங்க வர்றதில்ல. செக்போஸ்ட் தற்காலிக ெஷட்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கு. உள்ளாட்சி நிர்வாகத்தினரும், கிராம அதிகாரிகளும் கழிவு கொட்டுற பிரச்னைய கண்டுக்கறது இல்ல. இப்படியே போனா, நான்கு வழிச்சாலை முழுசும் இதே நிலைமைக்கு மாறிடும். அதுக்குள்ள அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கலைனா, கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையில, போராட்டம் நடத்த போறதா விவசாயிகள் சங்கத்துல முடிவு பண்ணியிருக்காங்கனு சொல்லி முடித்தார். பேச்சு சுவாரஸ்யத்துல இருந்தவங்க, அதெல்லாம் சரி நாம அந்த பக்கம் போய் நிற்கலாம்னு, அங்கிருந்து நகர்ந்து போனாங்க. நாமும் அங்கிருந்து பைக்கை கிளப்பினோம்.

ஊரு முழுக்க திருட்டாய் நடக்குது... மக்களுக்கு பயமாய் இருக்குது!

உடுமலை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டுல, நண்பரை சந்தித்தேன். நம்ம ஊருல சொல்லி வச்ச மாதிரி திருட்டு நடக்குது. எதாவது செய்தி போட்டு மக்களை உஷார் படுத்தலாமேனு, பேச ஆரம்பித்தார். உடுமலை அய்யலுமீனாட்சி நகர், சங்கர் நகர், காந்திநகர் - 2,3, இந்திரா நகர் உள்ளிட்ட இடத்துல, தொடர் திருட்டு நடந்துட்டு இருக்கு. ஒரே மாதிரியாக, காம்பவுன்ட் சுவரை தாண்டி, உள்ளே நுழைஞ்சு, வீட்டு கதவை உடைந்து, பீரோவில் இருக்கற நகை, பணத்தை எல்லாம் திருடிட்டு போறாங்க. அங்க இருக்கற, கண்காணிப்பு கேமராக்கள்ல, பகல், இரவு நேரத்துல திருடர்கள் நோட்டமிடுறதும், யாரும் இல்லாத வீடுகள்ல பகல் நேரத்திலேயே நுழைவதும் ரெக்கார்டு ஆகியிருக்கு. அய்யலுமீனாட்சி நகரிலுள்ள ஒரு வீட்டுல, முதியவர்களை கட்டிப்போட்டு, நகையை திருடிட்டு போயிருக்காங்க. தொடர் திருட்டு நடந்தாலும், போலீசார் வழக்கு பதிவு செய்யாம இழுத்தடிக்கறாங்க. ஒரு சிலருக்குசொற்ப அளவிலான நகை மட்டும் திருட்டு போனதா எப்.ஐ.ஆர்., போட்டிருக்காங்க. திருட்டு நடந்த வீட்டுக்கு, கைரேகை நிபுணர்கள் வந்தா, அவங்க செலவுக்கு வீட்டுக்காறங்க பணம் கொடுக்க வேண்டியிருக்கு. என்ன நடந்தாலும், ரோந்து பணி, திருடர்களை பிடிக்கும் பணியில, உட்கோட்ட அதிகாரி முதல் உள்ளூர் போலீசார் வரை அலட்சியமாகவே இருக்காங்க. உடுமலையில நடக்கற தொடர் திருட்டை போலீசார் 'ரகசியமாக' வச்சிருக்காங்க. திருட்டை தடுக்க, ரோந்து பணிய பலப்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாம போலீசார் அலட்சியமா இருக்காங்க. இதுனால, குடியிருப்பு பகுதியில முதியவர்களை வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போறவங்களும், வெளியூருக்கு போகறவங்களும் செய்வதறியாது அச்சத்துல இருக்காங்கனு, விவரத்த சொன்னாரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை