மாநகராட்சியில் குடியரசு தினவிழா; 101 ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்
கோவை; கோவை மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில், சிறப்பாக பணிபுரிந்த, 101 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கோவை மாநகராட்சியில், நடந்த விழாவில், மேயர் ரங்கநாயகி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.முன்னதாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில், மாநகராட்சியில், 20 ஆண்டுகள் விபத்து ஏற்பாடாத வகையில், வாகனம் இயக்கிய இரு டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள் நான்கு பேருக்கு தலா, ரூ.2,000 மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த, 95 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவின் ஒரு பகுதியாக மாநகராட்சியின், 11 பள்ளிகளை சேர்ந்த, 86 மாணவர்களின், 64 'ஸ்டெம்' மாதிரி அறிவியல் கண்காட்சி நடந்தது. பல்வேறு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.துணைமேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர்கள் சுல்தானா, குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.