புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் கழிவறை கேட்டு கோரிக்கை
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில், கழிவறை வசதி இல்லாததால், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தொண்டாமுத்துார் வட்டாரத்தில் தொண்டாமுத்துார், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றின் எல்லைக்கு உட்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷனில் தினமும் அடிதடி, சொத்து பிரச்னை, குடும்ப சண்டை, மதுபோதையில் தகராறு செய்தல், சாலை விபத்துகள் போன்றவை தொடர்பாக, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர், வழக்குகளுக்காக, காலை முதல் மாலை வரை, போலீஸ் ஸ்டேஷன்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர்களுக்காக, போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் வசதி இருப்பதில்லை. ஸ்டேஷன்களுக்குள் மட்டுமே கழிவறை உள்ளது. புகார் அளிக்க வரும் பொதுமக்கள், அந்த கழிவறையை பயன்படுத்த முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள், குறிப்பாக, பெண்கள், சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.