ஆன்மிக இசைக்கலை விழா நடத்த கோரிக்கை
பொள்ளாச்சி; உலக நல வேள்விக் குழு, நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆன்மிக இசைக்கலை விழா, பொள்ளாச்சி அம்மன் மஹாலில் நடந்தது. நிர்வாகி நஞ்சப்பன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இசை, பஜனை, பரதம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கோவில்களில், 'ஆர்கெஸ்ட்ரா' நடத்துவதை தவிர்த்து, நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு அளிக்க வேண்டும்.அமாவாசை, பவுர்ணமி நாட்களில், ஆன்மிக இசைக்கலை விழா, பஜனை நடத்த அரசு முன் வரவேண்டும். கோவில்களில், திருவிழா காலங்களில் இசைக் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோல, சிறுவர்களுக்கு சமய வகுப்பு நடத்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.