பல்லடம்--செட்டிப்பாளையம் ரோட்டில் பஸ்கள் இயக்க கோரிக்கை
சூலுார்; பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக கோவைக்கு பஸ்கள் இயக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பல்லடம்--செட்டிபாளையம் ரோட்டில், பணிக்கம்பட்டி, அய்யம்பாளையம், கரடி வாவி, செலக்கரச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களை சுற்றி, ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கோவைக்கு செல்ல வேண்டும் என்றால், சூலுார் வழியாக சென்று வருகின்றனர். இதனால், அனைவரும் அலைச்சலுக்கு உள்ளாவதால், செட்டிபாளையம் ரோட்டில் புதிய பஸ்களை இயக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து பல்லடத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ் கூறியதாவது :ஜவுளி இயந்திரங்களின் உதிரிபாகங்கள், வாகன உதிரிபாகங்கள், மின்சாதன பொருட்கள் வாங்கவும் கோவைக்கு சென்று வருகின்றனர். காந்திபுரம் சென்று அங்கிருந்து ஒரு சில பொருட்கள் வாங்க உக்கடத்துக்கு வேறு பஸ்களில் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கல்லுரிகளுக்கு செல்ல காந்திபுரம் சென்று அங்கிருந்து உக்கடம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், கல்லுாரி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதனால், பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் ரோட்டில் உக்கடத்துக்கு புதிய பஸ்களை இயக்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கும், கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.