உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்க கோரிக்கை

 கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்க கோரிக்கை

வால்பாறை: யானைகளிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, எஸ்டேட் பகுதியில் கன்டெய்னர் கடைகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரை தவிர, எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாவதுடன், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரேஷன் கடைகள் சேதமடைந்த நிலையில், திறந்த வெளியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனிடையே ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று,மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வால்பாறையில் முதல் கட்டமாக ஐந்து கன்டெய்னர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே யானைகள் நடமாட்டம் உள்ள எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடைகளை கன்டெய்னர் கடைகளாக மாற்ற வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் முகாமிடும் யானைகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்துவதால், கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், எஸ்டேட் பகுதியில் ஐந்து இடங்களில் கன்டெய்னர் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிற பகுதிகளிலும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை