குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்
கோவை: பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்த பகுதியில் வளர்க்கும் மரங்களையும், செடி கொடிகளையும் அப்புறப்படுத்த முயற்சிப்போரிடமிருந்து காப்பாற்ற, கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவை வடக்கு தாலுகாவுக்குட்பட்ட கணுவாய் குப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள, ஸ்ரீ ரங்கா விருந்தாவன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சரவணக்குமார், ராணி, குருராஜ், மஞ்சுப்பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனு: ஸ்ரீ ரங்கா விருந்தாவன் நகரில், நான்காண்டுகளாக குடியிருக்கிறோம். இந்நகருக்கு, 2021ல் மனைப்பிரிவாக பிரித்து உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்போர் பயன்படுத்துவதற்காக, பூங்கா பயன்பாட்டுக்கு 16.238 சென்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு செடிகள், மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். அங்குள்ள மரங்களையும் செடி, கொடிகளையும் அகற்றி அப்புறப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். தடுத்து நிறுத்தி குடியிருப்புவாசிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.