அன்னுாரில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
அன்னுார்:அன்னுாரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பணிகளை புறக்கணித்து ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டத்தில், வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை நடத்த, போதிய நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2023ம் ஆண்டு கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட ஐந்து சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இதன்படி அன்னுார் தாலுகாவில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பெரும்பாலான அலுவலர்கள் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து, வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ''வரும் 6ம் தேதி முதல் வருவாய்த் துறையில் பணிபுரியும், 42 ஆயிரம் ஊழியர்களும் ஈட்டிய விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என்றார்.