சாலை சந்திப்பு அருகே பஸ் ஸ்டாப் விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு அருகே, பஸ் ஸ்டாப் இருப்பதால், விபத்து அதிகரிப்பதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இங்கு குடிபெயர்ந்தும் வருகின்றனர். மேலும், சுற்றுலா தலங்கள், கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், பொள்ளாச்சி மார்க்கமாக செல்வதால், நாளுக்கு நாள், வாகனங்களின் இயக்கம் அதிகரித்தும் வருகிறது. அவ்வப்போது, விதிமீறல், அதிவேகம் போன்ற காரணங்களால் விபத்தும் நேரிடுகிறது. இதுஒருபுறமிருக்க, பிரதான வழித்தடங்களில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு அருகே பஸ் ஸ்டாப் அமைந்துள்ளதால், நெரிசல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: சாலை சந்திப்புகள், திருப்பங்கள் ஒட்டியே பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு, பயணியர் ஏறி, இறங்குவதற்கு ஏற்ப பஸ்கள் நிறுத்தப்படுகிறது. பின்னால் செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள், அந்த பஸ்சின் மீது தங்களது வாகனங்களை மோதும் நிலை ஏற்படுகிறது. மாலை நேரங்களில், ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படும் பஸ்களில் இருந்து, பயணியர் ஏறி இறங்கும் போது, பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கோவை ரோடு மகாலிங்கபுரம் சந்திப்பு, திருவள்ளுவர் திடல், நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு, கோட்டூர் ரோடு நகராட்சி பள்ளி, நகராட்சி அலுவலகம் அருகே, தேர்நிலையம் மற்றும் ஆனைமலை ரவுண்டானா பகுதிகளில், பஸ் ஸ்டாப்களால் நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு ஒட்டிய பஸ் ஸ்டாப்புகளை சற்று தொலைவில் இடமாற்றம் செய்தால், மக்கள் பயனடைவர். விபத்துகளும் தவிர்க்கப்படும். இவ்வாறு, கூறினர்.