ரோடு, கிராமத்தின் பெயரில் ஜாதி; கிராமசபையில் விவாதித்து மாற்றம்
சூலுார்; ஜாதி பெயர்கள் கொண்ட கிராமங்கள், ரோடுகள், தெருக்களின் பெயர்களை, கிராம சபையில் விவாதித்து மாற்ற முடிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக, ஒத்திவைக்கப்பட்டது. அந்த கிராம சபை கூட்டங்கள், வரும், 11ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், ஜாதி பெயர்களை கொண்ட ஊராட்சிகள், ரோடுகள், தெருக்கள், குடியிருப்புகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுடன் உரிய ஆலோசனைகள், பதிவுகளை பெற்று, அவற்றை விவாதித்து, ஆய்வு செய்து, அறிக்கையை கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு, பெயரை மாற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை விவாதித்து உறுதி செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.