வேர்களை வளர்க்கும் விழுதுகள்
வால்பாறை: வால்பாறை அருகே, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆண்டு தோறும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், வில்லியம் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதியிடம் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: படித்த பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நுால்கள் மற்றும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக தீர்வு புத்தகங்கள், வினா வங்கி கையேடு ஆகியவை வழங்கப்பட்டன. இது தவிர, பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது. உயர்கல்வி, போட்டித்தேர்வுக்காக கோவை செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, வாகன வசதி ஏற்பாடும் செய்துதரப்படுகிறது. மாணவர்கள் திறம்பட படித்து, பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.