வேளாண் ஸ்டார்ட் அப்களுக்கு 1 கோடி ரூபாய் மானியம்
கோவை; வேளாண் தொழில்நுட்ப காப்பகத்தின் வாயிலாக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் அதுசார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு ரூ. 1 கோடி மானியம் வழங்கப்பட்டது.வேளாண் பல்கலை வளாகத்தில், வேளாண் வணிக இயக்குநரகத்தில், தொழில்நுட்ப வணிகக் காப்பகம் (இன்குபேஷன் மையம்) செயல்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் அதுசார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு இந்த அமைப்பு வழிகாட்டி வருகிறது.மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ், 'ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா- வேளாண் வணிக காப்பகங்கள் வாயிலாக, வேளாண் மற்றும் சார்ந்த துறைகளுக்கு நிதி பங்களிப்பின் மூலம் புத்துயிர் அளித்தல்' திட்டத்தின் கீழ், இரு பிரிவுகளில் மானியம் வழங்கப்படுகிறது.புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையும், வேளாண் துளிர் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.இந்த ஆர்.கே.வி.ஒய்., திட்டத்தின் கீழ், 2019 முதல் 2022 வரை ரூ.8.10 கோடி மானியம், கோவை வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் கீழ், 72 தொழில்முனைவோர்க்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வேளாண் துளிர் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடந்தது.19 நிறுவனங்களுக்கு ரூ.1.05 கோடி மானியத்தை, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். இம்மானியம், அவர்களின் தொழில் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில் வழங்கப்படுகிறது.வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் சோமசுந்தரம், தொழில்நுட்ப வணிகக் காப்பக தலைமைச் செயல் அதிகாரி ஞானசம்பந்தம், பல்கலை நிர்வாகிகள், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.