போலி செயலியில் டிரேடிங் ரூ.77 லட்சம் முதலீடு போச்சு
கோவை:கோவை, செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத், 50; பி.காம் பட்டதாரி. இவர், தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். கூடுதல் வருமானத்துக்கு பங்குசந்தையில், 'டிரேடிங்' செய்வது குறித்து இணையதளத்தில் தேடியுள்ளார்.செப்டம்பரில் வினோத்தின் மொபைல் எண்ணில் பேசிய நபர், ஆன்லைன் டிரேடிங்'கில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாக தெரிவித்தார். வினோத், மோசடி நபர் அனுப்பிய,'ஷேர்கான்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்தார்.மேலும், ஷேர்கான் செயலி வாயிலாக, எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும்; எப்போது விற்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை மோசடி நபர்வழங்கினார். அதை பின்பற்றிய வினோத், லாபம் ஈட்டுவது போலசெயலியில் காட்டியுள்ளது. நம்பிய வினோத், செப்., - அக்., மாதங்களில், 12 தவணைகளாக, 77 லட்சத்து, 40,000 ரூபாய் முதலீடு செய்தார்.அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. மோசடி நபரிடம் கேட்டபோது, வரி செலுத்த வேண்டும் எனக்கூறி, மீண்டும் பணம் அனுப்ப கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை வினோத் உணர்ந்தார். மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.