வணிக வளாகத்தில் வாகனம் நிறுத்தினால் ரூ.500 அபராதம்
மேட்டுப்பாளையம்: அண்ணா வணிக வளாகத்தில் நிறுத்திய வாகனத்துக்கு, நகராட்சி நிர்வாகம் 500 ரூபாய் அபராதம் விதித்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில், 45 கடைகள் உள்ளன. கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, காலி இடம் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில், வெளியூர் வேலைக்கு செல்லும் நபர்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் கடைகளுக்கு வேலைக்கு வருபவர்களின் வாகனங்கள், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று காலை மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள், அண்ணா வணிக வளாகத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை, சங்கிலிகளால் இணைத்து பூட்டு போட்டனர். மாலையில் வாகனங்களை எடுக்க வந்த உரிமையாளர்களிடம், நகராட்சி ஊழியர்கள் அலுவலகத்துக்கு சென்று, அனுமதி சீட்டு வாங்கி வரும்படி கூறினர். நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அனுமதி சீட்டு கேட்டபோது, 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறினர். வாகன உரிமையாளர்கள் அபராத கட்டணத்தை செலுத்தி, ரசீது மற்றும் அனுமதி சீட்டை பெற்று வாகனங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என, நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.