பொள்ளாச்சி வழியாக பெங்களூரூக்கு ரயில் இயக்குங்க! ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி வழியாக பெங்களூருக்கும்; ராமேஸ்வரத்துக்கும் விரைவில் ரயில் இயக்க வேண்டும்,' என, ரயில்வே பயனர்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பாலக்காடு கோட்ட, ரயில்வே பயனர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி தொழில் வர்த்தகசபையை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம், பாலக்காடு கோட்ட ரயில்வே பயனர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை இணை செயலாளர் ஆனந்தகுமார் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று பாலக்காட்டில் கோட்ட ரயில்வே பயனர்கள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் பங்கேற்று, பொள்ளாச்சி தேவைகள் குறித்து பேசினார்.அவர் கூறியதாவது:கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ரயில்வே அதிகாரிகள், விரைவில் இதற்கான அனுமதி பெற்று செயல்படுத்தப்படும், என்றனர்.எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது. ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க கோரிக்கை விடுத்ததும், அதற்கான அனுமதி கிடைத்துள்ளது, பாலம் பணிகள் முடிந்ததும் ஜன., மாதத்தில் ரயில் இயக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து எப்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கேள்வி எழுப்பிதற்கு, 'மார்ச், 2025ம் ஆண்டுக்குள் பணிகள் முடித்து திறக்கப்படும்,' என்றனர் அதிகாரிகள்.அதே போன்று, சென்னைக்கு இயக்கப்படும் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார், இளநீர் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், கூட்ஸ் ரயில் சேவையை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.இதற்கு ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும், இதற்கான கூட்டம் நடத்தி ஏற்பாடு செய்யப்படும், என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தது.இவ்வாறு, அவர் கூறினார்.