தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் சப்கான் 2025 கண்காட்சி துவக்கம்
கோவை,; கோவை கொடிசியா சார்பில், கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், 'சப்கான் 2025' கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில், 250 தொழில் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து, தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.கண்காட்சியை, பிரிக்கால் சேர்மன் வனிதா மோகன் துவக்கி வைத்தார். சப்கான் 2025 சேர்மன் சஞ்சிவ் குமார் வரவேற்றார். l பொதுத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் சார்பில் இடம் பெற்ற அரங்கு, அனைவரையும் கவர்ந்துள்ளது. பல லட்சம் கோடி ருபாய் மதிப்பில், ஆர்டர்களை தன் கைவசம் வைத்துள்ளது இந்த நிறுவனம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், இந்த நிறுவனத்துக்கு பொருட்களை சப்ளை செய்ய முடியும். இந்த நிறுவனத்துக்கு தேவையான, சிறு பொருட்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரமான முறையில் சப்ளை செய்யலாம். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை இந்த நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை, அரங்கில் இந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. l கப்பல் கட்டுமான பணியில் உள்ள, கொச்சின் ஷிப்யார்டு எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் தேவைகளும் அதிகம். இந்த நிறுவனத்துக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றியும், அரங்குகளில் விளக்கம் தருகின்றனர். இவற்றை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், ஒரு முறை ஆர்டர் பெற்று விட்டால், தேவைப்படும்போது எல்லாம் பொருட்களை, சப்ளை செய்து கொண்டே இருக்கலாம். பொருட்கள் அவர்கள் கேட்கும் தரத்துக்கும், மேலானதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அளவு கோல்.இது போன்றே தென்னக ரயில்வே, இன்ஜின் தொழிற்சாலை, கார்டைட், கேரளா அக்ரோ மெஷினரி உள்ளிட்ட 13 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. l கோவையை சேர்ந்த பிரிக்கால், எர்போல்க், அல்பைன் டேப் போன்றவைகளும் பங்கேற்றுள்ளன. தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. சிறு பிளாஸ்டிக் தயாரிப்பு முதல் பெரிய அளவிலான லேத் இயந்திரங்கள் வரை, கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட, 5 மாநிலங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.ராணுவ தளவாட உதிரி பாகங்கள், ரயில்வே, கப்பல், விவசாயம், ஜவுளித்தொழில், கட்டுமான தொழில் மோட்டார் பம்ப் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான துல்லியமாக செயல்படும் நுண்கருவிகள் அவற்றுக்கான தேவைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி நாளை நிறைவடைகிறது.