அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு ஆளுக்கு ரூ.6,000 வரை ஊதியம் குறைப்பு
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர்கள், செக்யூரிட்டி, அடிப்படை மற்றும் துாய்மை பணியாளர்கள் 450 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. இவர்களுக்கு ஜூன் ஊதியம், ஜூலையில் வழங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் 3000 முதல் 6000 ரூபாய் வரை குறைத்து வழங்கியதாக கூறப்படுகிறது. ஒப்பந்த பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, அடுத்தமாத சம்பளத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்துக்கான ஊதியம், சில நாட்கள் முன்பு வழங்கப்பட்டது. முந்தைய மாதம் போலவே, இப்போதும் ஊதியம் குறைக்கப்பட்டு இருந்ததால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ''ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக கிரிஸ்டல் பொறுப்பாளர்கள் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று விளக்கம் சொல்லவில்லை. 'விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள், இல்லை என்றால் கிளம்புங்கள்' என்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இதில் நாங்கள் தலையிட முடியாது என கைவிரிக்கிறது. மாதக்கணக்கில் போராட்டம் நடத்திதான் இந்த ஊதியமே கிடைத்தது. அதையும் காரணம் சொல்லாமல், குறைத்ததை ஏற்க முடியாது. கலெக்டர் தலையிட்டு குறைக்கப்பட்ட ஊதியத்தை, பெற்றுத்தரவேண்டும்” என பணியாளர்கள் கூறினர்.