உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசு ஒழிப்பு பணியில் துாய்மை பணியாளர்கள்

கொசு ஒழிப்பு பணியில் துாய்மை பணியாளர்கள்

பொள்ளாச்சி; பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.பருவமழை துவங்கியுள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் நோய்களை தடுக்கும் வகையிலும், பொள்ளாச்சி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அவ்வகையில், 86 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வாயிலாக வீடுவீடாக 'அபேட்' மருந்து தெளிப்பது, வாகனங்கள் வாயிலாக கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது என கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், மே மாத இறுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது இருந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இருப்பினும், காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவில்லை. வீடுகள் தோறும் துாய்மைப் பணியாளர்கள், டெங்கு கொசு உற்பத்திக்கான காரணம் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.மழைநீர் தேக்கமடையும் இடங்கள் கண்டறியப்பட்டு, இயந்திரங்கள் வாயிலாக சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதேநேரம், பொதுமக்கள் தண்ணீர் சேமிக்கும் தொட்டி, டிரம், பாத்திரம் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்.வீட்டின் சுற்றுப்பகுதியில், மழை நீர் தேங்கும் வகையில், பழைய டயர், ஆட்டுக்கல், டிரம், தேங்காய் சிரட்டை போன்றவை இருந்தால் அப்புறப்படுத்தி, சுற்றுப்பகுதியை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, வீடு வீடாக அறிவுறுத்தப்படுகிறது.மழைக்காலத்தில் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ