உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி

வாகன நெரிசலில் சிக்கி தவிக்குது சரவணம்பட்டி; இங்கு தைரியமாக பயணிக்க, உங்களுக்கு வேண்டும் ஆயுசு கெட்டி

சரவணம்பட்டி: சரவணம்பட்டியில் காலையிலும் மாலையிலும் கனரக வாகனங்கள் அதிகரிப்பால், நெரிசல் அதிகரித்துள்ளது. தினம் தினம் நடக்கும் உரசல், மோதலால் காயமும் உயிர் பலியும் ஏற்படுகிறது. நகரில் விபத்தை குறைப்பதாக கூறி களம் இறங்கியுள்ளதாக கூறிக்கொள்ளும் போக்குவரத்து போலீசார், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.கோவை -- சத்தி மெயின்ரோட்டில் சரவணம்பட்டி உள்ளது. தொழில், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள இங்கு, ஒவ்வொரு நாளும் போக்குவரத்தில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

சாலை நிறைய வாகனங்கள்

இப்பகுதியில் ஐந்து கல்லுாரிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளிகள், கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. இந்த நிறுவனங்கள் காலை 9:00 மணி முதல் செயல்பட துவங்குகின்றன.ஒரே சமயத்தில் கல்லுாரிகளுக்கு செல்லும் பஸ்கள், பள்ளிகளுக்கு செல்லும் வேன்கள், தகவல் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு செல்லும் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள்... என ரோடு நிறைந்து விடுகிறது.பெரும்பாலான நிறுவனங்கள் சத்தி ரோட்டிலிருந்து துடியலுார் ரோடு செல்லும் ரோட்டில் உள்ளன. இதனால், துடியலுார் ரோட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இது போன்றே, சத்தி ரோட்டிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டிலும் நெரிசல் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அடுத்து, பத்திர பதிவு ஆபீஸ் உள்ளதால், இரண்டு புறங்களிலும் கார்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. ரோட்டில் ஒதுங்க வசதி இல்லாமல் இங்கும் நெரிசல் ஏற்படுகிறது.இவற்றுக்கு எல்லாம் மேலாக, விபத்துக்கு காரணமாக அமைவது, இரும்பு கம்பிகள், ஸ்டீல் ரோல்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தான். நீண்ட அமைப்புக் கொண்ட இந்த லாரிகள், சந்திப்பில் திரும்புவது எளிதானதாக இருப்பதில்லை.ஒரு முறை இந்த வகை லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. கான்கிரீட் லாரிகளும் இந்த வழியாக செல்கின்றன. ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.சரவணம்பட்டி விளாங்குறிச்சி சந்திப்பில், சில நாட்களுக்கு முன் 3 விபத்துக்கள் ஏற்பட்டன. ரோட்டை கடக்க முயன்ற தம்பதியினர் மீது, ஆட்டோ மோதி ஒருவர் அதே இடத்தில் இறந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரியும் காரும் உரசி கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.ஆகவே, இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

n லாரிகள் செல்லும் வழியை, மாற்றியமைக்க வேண்டும். அல்லது, விளாங்குறிச்சியிலிருந்து சத்தி ரோட்டிற்கோ, காளப்பட்டி வழியாக சத்தி ரோட்டிற்கோ இவற்றை மாற்றி விட வேண்டும். பீக் அவர் நேரங்களில் இவற்றை இயக்க அனுமதிக்க கூடாது.n செக் போஸ்ட் முன் ஆம்புலன்ஸ், வாகனங்களை நிறுத்த ரோடு அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு குறுகலாக இருப்பதால் அதன் அளவை குறைக்க வேண்டும். சத்தி ரோட்டில் அமைந்துள்ள போலீஸ் செக் போஸ்ட்டின் அகலத்தை குறைக்க வேண்டும்.n சிக்னல் முன்பாக ரோட்டின் நடுவே, சாக்கடை கால்வாய் உடைப்பை சரி செய்ய வைக்கப்பட்டிருந்த தடுப்பு அகற்றப்படவில்லை. அதே இடத்தில் தடுப்பு பல நாட்களாக இருப்பதால், இடது புறமாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றன. நெரிசல் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N DHANDAPANI
டிச 04, 2024 09:08

கோவை மாநகர கமிஷனர் அவர்களுக்கும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோவை மாவட்ட போக்குவரத்து இணை கமிஷனர் அவர்களுக்கும் பணிவான வேண்டுகோள்.... அவிநாசி சாலையை சத்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையுடன் இணைக்கும் மூன்று வழித்தடங்களிலும் தயவுசெய்து நீங்கள் ஒரு முறை பயணித்து பார்த்தால் காளபட்டி சந்திப்பு, விளாங்குறிச்சி முதல் கரட்டுமேடு வரை உள்ள சாலை, சரவணம்பட்டி சந்திப்பு, அத்திப்பாளையம் ரோடு - துடியலூர் ரோடுடன் சந்திக்கும் சந்திப்பு ஆகிய நான்கும் காலத்திற்கு ஏற்ப இல்லை என எளிதில் அறிந்து கொள்ளலாம்.... இதை சரி செய்வது ....எளிதாக சிறு சாலை பழுது பார்த்தல், ஆங்காங்கே நோ பார்க்கிங் வைப்பதும் மட்டுமே மிகப்பெரிய முன்னேற்றத்தை அளிக்கும் என்பதை தாங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.


ellar
டிச 04, 2024 09:02

இந்த சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்கு உள்ள வாய்ப்பை காவல்துறை பயன்படுத்தவில்லை ஏனென்றால் சரவணம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் செல்லக்கூடிய வாகனங்கள் நேராக கரட்டு மேட்டுக்கு செல்லும் வழி குண்டும் குழியுமாக வழி ஓரங்களில் புதர்கள் மண்டி இருக்கும் காரணத்தினால் அவ்வழியில் சத்தி சாலை சென்றடைய நேரம் அதிகம் ஆகின்றது.. அத்தோடு பாதுகாப்பு குறைபாடும் உள்ளது... எனவே அனைவரும் சரவணம்பட்டி வந்து செல்கின்றனர்.....கோவை மாநகராட்சியும் போக்குவரத்து போலீசாரும் இணைந்து இந்த பிரச்சினையையும் காளபட்டி ரவுண்டானா பிரச்சினையையும் தீர்த்தால் சரவணம்பட்டிக்கு வரும் வாகனங்கள் குறைந்து விடும்


ellar
டிச 04, 2024 08:58

மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையால் இப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்து முக்கியத்துவம் கொடுத்துள்ள தினமலருக்கு நன்றிகள் பத்திரிக்கை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ள பட்டியலுடன் கீழ் கண்டவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்: சரவணம்பட்டி துடியலூர் சந்திப்பில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் பச்சை விளக்கு எரியும் நேரத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் பாதி எண்ணிக்கையில் தான் பயணிக்க முடிகிறது.... இந்த இடத்தில் சாலை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுவது இன்று நேற்று அல்ல சுமார் பத்து வருடங்களாக இதே நிலைமையில் தான் இருக்கிறது.. துடியலூர் சாலை பிரிவிலிருந்து சுமார் 159 அடி தூரத்தில் கீரணத்தம் சாலை பிரியும் இடத்தில் சாலை மருங்கிலும் நிறுத்தப்படும் வாகனங்களாலும் உச்சகட்ட வாகனங்கள் செல்லும் நேரத்தில் அந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இல்லாததாலும் இந்த மொத்த இடமும் வாகன நெரிசலில் திணறுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை