மெட்ரோ பணிக்காக 30 மீட்டர் விரிவடையப்போகிறது சத்தி ரோடு
கோவை; 'மெட்ரோ ரயில் பணிக்காக, சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் பகுதியில் இருந்து 1.4 கி.மீ., நீள சாலை, 30 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட உள்ளது' என, எம்.பி., ராஜ்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் சேலம் கோட்ட மேலாளர், கோவை ரயில் நிலைய மேம்பாடு தொடர்பான ஆய்வுக்கு வந்திருந்தார். அவரிடம் கோவை மட்டுமின்றி போத்தனுார், வடகோவை ரயில் நிலையங்களில் இருந்தும் ரயில்கள் புறப்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தோம். இக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு இரவு நேர ரயில், நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குதல், வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு, வடகோவை கூட்ஷெட் இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தோம். இக்கோரிக்கைகளை தென்னக ரயில்வே பொது மேலாளரைச் சந்தித்தும் முறையிட்டேன். கோவை ரயில் நிலையத்தில் இருந்து அரசு பொது மருத்துவமனை மற்றும் அவிநாசி சாலை ஆகிய இரண்டு பகுதிகளுக்கும், நடை மேம்பாலம் கோரியுள்ளோம். வடகோவை ரயில் நிலையம் வரும் பிப்.,க்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர். மெட்ரோ சர்வே பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன. சத்தி சாலையில், டெக்ஸ்டூல்ஸ் பகுதியில் இருந்து 1.4 கி.மீ. நீளத்துக்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது மிக சிக்கலான பகுதி. அகலப்படுத்துவதற்கான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. முதலில் 24 மீ. அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 30 மீ. அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை கமிஷனர் குமரேசன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து அரசு பொது மருத்துவமனை மற்றும் அவிநாசி சாலை ஆகிய இரண்டு பகுதிகளுக்கும், நடை மேம்பாலம் கோரியுள்ளோம். வடகோவை ரயில் நிலையம் வரும் பிப்.,க்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர். விமான நிலைய விரிவாக்கம் “விமான நிலைய விரிவாக்கத்துக்கான இடத்தை, தமிழக அரசு, விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் எப்போதோ ஒப்படைத்து விட்டது. கோவைக்கு விமான நிலைய இயக்குநரைக் கூட நியமிக்கவில்லை; ஓராண்டாக காலியாக உள்ளது. சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும். கழிவு நீர் பிரச்னைக்கு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையமே விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த வேண்டும்,” என்றார் எம்.பி., ராஜ்குமார்.