திறனறி தேர்வு வாயிலாக உதவித்தொகை; இலக்கு எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?
பொள்ளாச்சி: தமிழகத்தில், உதவித்தொகை வழங்குவதற்காக, தேர்வு செய்யப்படும் பிளஸ் 1 மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.பிளஸ்- 1 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, மாதம், 1,500 ரூபாய் வீதம், 20 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள்; 50 சதவீதம் அரசு பள்ளி உட்பட பிற தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு இன்று நடத்தப்படுகிறது.மாவட்டந்தோறும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இந்த தேர்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், உதவித் தொகை பெறுவதற்கு, தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அளவில் உள்ள, பிளஸ் 1 மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், திறனறி தேர்வு வாயிலாக ஒரு சதவீதத்திற்கும் குறைந்தவர்களே உதவித் தொகை பெறுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.மாறாக, தேர்வு எழுதுவோரில், இரு சதவீதம் அளவிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.இவ்வாறு, கூறினர்.