உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மேற்கூரை சேதம்; அச்சத்தில் மாணவர்கள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி

பள்ளி மேற்கூரை சேதம்; அச்சத்தில் மாணவர்கள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி

வால்பாறை; வால்பாறை அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறையில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் சக்தி எஸ்டேட் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தற்போது, 12 மாணவர்கள் படிக்கின்றனர். ஓராசிரியர் பள்ளியாக உள்ளது.கடந்த, 1979ம் ஆண்டு இந்தப்பள்ளி துவங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கு அடிக்கடி யானைகள் வந்து சேதப்படுத்துவதாலும், கனமழை பெய்வதாலும் பள்ளிக்கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.பல இடங்களில் மேற்கூரை சேதமானதால், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கூறியும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வகுப்பறைக்குள் செல்ல மாணவர்கள் அச்சப்படுகின்றனர். மேற்கூரை சேதமடையாத வகுப்பறை, மற்றும் வராண்டாவில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர்.வார்டு கவுன்சிலர் கனகமணியிடம் (தி.மு.க.,)கேட்ட போது, ''பள்ளிக்கட்டம் இடிந்து விழும் நிலையில் உள்ளதை சீரமைத்துத்தரக்கோரி, பள்ளி சார்பிலும், நானும் மன்றக்கூட்டத்தில் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.இப்படியே போனால், பள்ளியில் படிக்க மாணவர்கள் வரமாட்டார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும்,'' என்றார்.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''சக்தி எஸ்டேட் துவக்கப்பள்ளியின் நிலை குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். விரைவில் திட்ட மதிப்பீடு தயாரித்து, பள்ளி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி மழை காலத்துக்கு முன், பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

அடிப்படை வசதியில்லை!

சக்தி எஸ்டேட்டை சுற்றிலும் தலநார், பிளன்டிவேலி, மகாலட்சுமி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்தப்பகுதியில், போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், பெரும்பாலான மாணவர்கள் வால்பாறை நகரில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாததால், சாதாரண காய்ச்சல், சளி சிகிச்சைக்கு கூட, 25 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி