இரண்டாம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு குடுத்தாச்சு
கோவை;காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கோவையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் பணி தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம், கணிதப் பாடத்திற்கான ஒரு புத்தகம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம் என, மூன்று புத்தகங்கள் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தமாக, 56,970 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ஒரு நோட்டுப் புத்தகம் வீதம் வழங்கப்பட்டது. மொத்தம், 60,623 நோட்டுப் புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.