மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் 18ம் தேதி செடல்
16-Jul-2025
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நடக்கும், செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா வரும், 17ல் துவங்குகிறது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தை ஒட்டி, 15 நாட்கள் செம்பை சங்கீத உற்சவம் நடக்கும். செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா ஆண்டு துவக்க விழா, வரும் 17ம் தேதி பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ள செம்பை கிராமத்தில் நடக்கிறது. பல்வேறு கோவில்களில் சங்கீத உற்சவம் நடத்திய பின், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நிறைவு செய்யப்படுகிறது. இது குறித்து, செம்பை வித்யா பீடம் செயலாளர் கீழத்தூர் முருகன் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதர், அனைத்து கலைஞர்களையும் குருவாயூருக்கு அழைத்து வந்து, மூன்று நாட்கள் சங்கீத உற்சவம் நடத்துவார். ஏகாதசி உற்சவம் நடக்க ஆறு வாரம் மட்டுமே இருந்த நிலையில், 1974 அக்., 16ல் அவர் இறந்தார். அவர், பத்மபூஷண் உட்பட பல விருதுகள் பெற்றிருந்தாலும், குருவாயூரில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் அவரது வாழ்நாளுக்கு பின், மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்படுகிறது. கடந்த, 1975 முதல் ஏகாதசி சங்கீத உற்சவத்தை 'செம்பை சங்கீத உற்சவம்' என பெயர் சூட்டி நடத்தப்படுகிறது. கிருஷ்ணர் அருளால் நடக்கும் இந்த சங்கீத ஆராதனை பொன்விழா காண்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
16-Jul-2025