உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 15 வழித்தடங்களில் சேவை; ரயில் பயணிகள் காத்திருப்பு

15 வழித்தடங்களில் சேவை; ரயில் பயணிகள் காத்திருப்பு

கோவை; தொழில் நிமித்தமாக வெளியூர்களில் இருந்து கோவையில் வசிப்போர், விடுமுறைக்குசொந்த ஊருக்கு செல்ல சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுதவிர, அலுவல் பணி, வர்த்தகம் தொடர்பாக பலரும் சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு ரயில் போக்குவரத்து தேவையானதாக இருக்கிறது. கோவை வழியாக தினமும், 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தேவை அதிகம் இருப்பதால், கோவையில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கும், 15 ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, ரயில்வே அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், ''சமீபத்தில் நடந்த டி.ஆர்.யு.சி.சி., கூட்டத்தில், புதிய ரயில்கள் இயக்க கோரப்பட்டது. மற்ற கோட்டங்களிலும் கூட்டம் முடிந்ததும் ரயில்கள் இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் கோட்ட அளவில், சில ரயில்கள் இயக்குவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். குறிப்பாக, கோவை வழியாக ஈரோடு - ராமேஸ்வரம் - போடிநாயக்கனுார் ரயில் இயக்க வாய்ப்புள்ளது. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் நிறைவடைந்ததும், ரயில்களை பராமரிக்க 'பிட் லைன்' கிடைக்கும். ''அதன்பின், புதிய ரயில்களை இயக்குவது எளிது என தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.

15 ரயில்கள் தேவை

கோவை - மங்களூர்(இன்டர் சிட்டி), எர்ணாகுளம் - காரைக்கால், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி, எர்ணாகுளம் - பெங்களூரு, கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, கோவை - கொல்லம், கோவை - போடிநாயக்கனுார், ஈரோடு - ராமேஸ்வரம் - போடி, கோவை - சேலம் மெமு, கோவை - பெங்களூரு(இரவு), கோவை - திருநள்ளாறு, கோவை - தாம்பரம்(நிரந்தரமாக்க வேண்டும்), மதுரை - கோவை(மேட்டுப்பாளையம் மற்றும் போடிநாயக்கனுார் வரை நீட்டிப்பு), கோவை - மயிலாடு துறை (சிதம்பரம் வரை நீட்டிப்பு).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ