தெருக்களில் கழிவுநீர்... அவதிப்படும் மக்கள் கண்ணீர்; சரிவர சோதனை செய்யாததால் தினமும் அவஸ்தை
கோவை; பாதாள சாக்கடை திட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வரும் இடங்களில் சரிவர சோதனை செய்யாததால், கழிவுநீர் கரைபுரண்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தின்கீழ் கோவையில் பாதாள சாக்கடை திட்ட(யு.ஜி.டி.,) பணிகள் துவங்கின. பழைய மாநகராட்சி பகுதிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இதற்கென, 582 கி.மீ.,க்குகுழாய் பதிக்கப்பட்டது.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலுார் பகுதிகளில் பணிகள் நடந்துவருகின்றன. 'அம்ருத் 2.0' திட்டத்தில், ரூ.185 கோடியில், கோவை வடக்கு, கிழக்கு மண்டலங்களில் விடுபட்ட பகுதிகளில் பணிகள் நடக்கின்றன.கணபதி, காந்தி மாநகர், விளாங்குறிச்சி ரோடு, தண்ணீர் பந்தல், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஒண்டிப்புதுாரில் என விடுபட்ட, 141.945 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில், குறிச்சி மற்றும் குனியமுத்துாரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாகரூ.591.34 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன.இதில், 10 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்ட, 18வது வார்டு சங்கனுார் லட்சுமி நகர், 41வது வார்டு பி.என்.புதுார் உட்பட பல்வேறு இடங்களில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பெருக்கெடுப்பது தொடர்கதையாக உள்ளது.குப்பையை சரியாக தரம் பிரித்து, மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்காமல், மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் வீசுவதும், இது போன்ற சாக்கடை அடைப்புக்கும் உடைப்புக்கும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.