கழிவுநீர் தேங்கிய குளங்கள்: துார்வார விவசாயிகள் முறையீடு
சூலுார் : சூலுார் தாலுகா அலுவலகத்தில் கடந்த, 20ம் தேதி முதல் ஜமா பந்தி நடக்கிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை செயலாளர் கணேசன் தலைமையில் விவசாயிகள், கோவை தெற்கு கோட்டாட்சியரிடம் அளித்த மனு:சூலுாரில் உள்ள பெரிய குளம் மற்றும் சின்ன குளம், 200 ஏக்கர் பரப்பு உள்ளது. நொய்யலில் இருந்து வரும் கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்குளங்கள், 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. கழிவு நீரில் உள்ள ரசாயனங்கள், பல அடி ஆழத்துக்கு குளத்தின் கீழ் படிந்துள்ளது.இதனால், நீரூற்று பாதைகள் அடைபட்டு, சுற்றுவட்டார கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் நீர் வற்றி வருகிறது. இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதி விவசாயம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கால்நடைகளுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.குளங்களை தூர் வார கோரி, விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அரசிடம் மனுக்கள் அளித்தும் தூர்வாரப்படவில்லை. சூலூர் சுற்றுவட்டார விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் இரு குளங்களையும் உடனடியாக துார்வாரி, விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.