யூ டர்ன் பகுதியில் செயல்படாத சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்!
பள்ளி அருகே குப்பை
பொள்ளாச்சி, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே குப்பை கொட்டி செல்கின்றனர். இதனால் அவ்வழியில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.- ரஞ்சித், பொள்ளாச்சி. மின்விளக்கு அமைக்கப்படுமா?
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் பயணியர் அவ்வழியே செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பயணியர் நலன் கருதி, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.- மோகன், கிணத்துக்கடவு. புதரை அகற்றணும்!
பொள்ளாச்சி, சேரன் நகர் பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் அதிகளவு செடிகள் முளைத்துள்ளதால், பயணியர் நிழற்கூரையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, இங்குள்ள புதர் செடிகளை அகற்றி பயணியர் பயன்பாட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமகிருஷ்ணன், பொள்ளாச்சி. விதிமீறும் வாகனங்கள்
வால்பாறை நகரின் முக்கிய இடங்களில் சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி, ரோட்டில் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது. இதைத் தவிர்க்க, ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரவி, வால்பாறை. செயல்படாத சிக்னல்
பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், கோவில்பாளையம் 'யூ டர்ன்' பகுதியில் இரவு நேரத்தில் சிக்னல் செயல்படாததால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், சிக்னலை விரைவில் சீரமைக்க வேண்டும்.- ஆதி, கோவில்பாளையம். மீண்டும் பெயர்ந்த இரும்பு
பொள்ளாச்சி -- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பெயர்ந்த இரும்பு சட்டங்கள் சமீபத்தில் தான் சீரமைக்கப்பட்டது. ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், பொள்ளாச்சி மார்க்கமாக வரும் பாலத்தில் இரும்பு சட்டம் ஒன்று பெயர்ந்துள்ளது. ஆரம்பத்திலேயே இதை சீரமைக்க வேண்டும்.- கமலக்கண்ணன், பொள்ளாச்சி. பராமரிப்பில்லாத மின்கம்பம்
உடுமலை, தாராபுரம் ரோடு அய்யலு மீனாட்சி நகரில் உள்ள உயர்மின் கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. பராமரிப்பில்லாமல் செடிகள் சுற்றி இருப்பதால், எந்த நேரத்திலும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழலாக உள்ளது.- விஷ்ணுப்ரியா, உடுமலை. ரோடு ஆக்கிமிப்பு
உடுமலை - பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில், வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கனரக வாகனங்களும் அதிகம் நிறுத்தப்படுவதால், அப்பகுதி வழியாக பஸ்கள் வர முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ஜெயந்தி, உடுமலை. சுகாதார சீர்கேடு
உடுமலை, அன்சாரி வீதியில் குப்பை உள்ளிட்ட கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. காலை நேரங்களில் கொசுத் தொல்லை அதிகரித்து, நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. குப்பை குவிப்பதை தவிர்க்க வேண்டும்.- வெங்கடேஷ், உடுமலை. விபத்து அபாயம்
உடுமலை ஜீவா நகர், பழனியாண்டவர் நகர் சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே, வாகனங்கள் அதிவிரைவாக செல்கின்றன. மாலை நேரங்களில் அவ்வழியாக நடைபயிற்சி செல்வோர் வேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்களால் பாதிக்கின்றனர். அப்பகுதியில் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.- வாணி, உடுமலை. இருள் சூழ்ந்த வீதி
உடுமலை, தளிரோடு, சங்கிலி வீதி பகுதியில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால் திருட்டு பயமும் உள்ளது. தெருவிளக்குகளை முறையாக பராமரித்து, எரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.- நந்தகோபால், உடுமலை. பூட்டி கிடக்கும் பூங்கா
உடுமலை, வாசவி நகரில் நகராட்சி குழந்தைகள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்கா திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. பூங்காவின் உள்ளே முறையான பராமரிப்பும் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது.- தனபால், உடுமலை.