குரங்குமுடி எஸ்டேட்டில் ஒற்றை யானை முகாம்
வால்பாறை; குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையால் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக காணப்படுவதால், கேரள மளுக்கப்பாறை வழியாக, வால்பாறைக்கு யானைகள் மீண்டும் வரத்துவங்கியுள்ளன.குறிப்பாக, பன்னிமேடு, செலாளிப்பாறை, வில்லோனி, புதுத்தோட்டம், குரங்குமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி செல்லும் ரோட்டில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையால், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். எஸ்டேட் தொழிலாளர்கள் யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் தேயிலை பறிக்க செல்ல அச்சப்படுகின்றனர்.இதனிடையே, வால்பாறை - குரங்குமுடி ரோட்டில் முகாமிட்ட ஒற்றை யானையை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானையின் நடமாட்டத்தை, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.