சிறுவாணி அணையில் நீர்க்கசிவு:
கோவை : கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இம்மாத இறுதியிலோ அல்லது அக்., முதல் வாரத்திலோ வரவுள்ளனர்.கோவை மாநகர பகுதியில் வசிக்கும் மக்களுக்குசிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகளில்இருந்து குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. மாநகர மேற்குப்பகுதி மக்களுக்கும், வழியார கிராமங்களுக்கும் சிறுவாணி குடிநீரே பிரதானம். இந்த அணை, கேரள வனப்பகுதியில் இருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது.சிறுவாணி அணையின் நீர் மட்டம் - 50 அடி; சிலஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்கள் கூறி, 45 அடிக்கு நீர் தேக்கப்படுகிறது. நீர்த்தேக்கும் பரப்பு சிறுவாணி அணையில் அதிகம் என்பதால், ஐந்தடி உயரத்தில், கோவை மாநகராட்சிக்கு ஐந்து நாட்களுக்கு, தேவையான தண்ணீரை தேக்கலாம்.அதனால், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அணை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நாளொன்றுக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிவது தெரியவந்தது. அதை தடுக்க வேண்டுமெனில், புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும். இதற்கான ஆய்வு கட்டணம், 17 லட்சம் ரூபாயை, கோவை மாநகராட்சி செலுத்தி விட்டது. நீர்க்கசிவை தடுக்க, உத்தேசமாக, 3 கோடி ரூபாய் செலவாகுமென, கேரள நீர்பாசனத்துறை தெரிவித்திருக்கிறது. இத்தொகையை தமிழக அரசிடம் கேட்டுப்பெற, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''சிறுவாணி அணையில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இம்மாத இறுதியிலோ அல்லது அக்., முதல் வாரத்திலோ வர இருக்கின்றனர்,'' என்றார்.