நகரில் மழைநீர் தேங்கும் ஆறு இடங்கள்; தடுக்க ரூ.96 கோடி கேட்கிறார் கமிஷனர்
கோவை : ''கோவையில் உள்ள சுரங்கப்பாதைகளில், மழை நீர் தேங்காத அளவுக்கு மாற்று நடவடிக்கை எடுக்க, 96 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.கோவை நகர்ப்பகுதியில் மழை பெய்தபோது, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், கிக்கானி பாலம், காளீஸ்வரா பாலம், சிவானந்தா காலனி ரயில்வே பாலம், திருச்சி ரோடு பெர்க்ஸ் ஆர்ச், கள்ளிமடை கதிரவன் லே-அவுட் ஆகிய ஆறு இடங்களில், வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் தேங்கியது.இதில், கதிரவன் லே-அவுட்டுக்குள் தண்ணீர் புகாத அளவுக்கு சங்கனுார் ஓடையின் கரையில் மணல் மூட்டைகள் அடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கிக்கானி பள்ளி பாலத்தில், 21 எச்.பி., மோட்டார் பொருத்தும் பணி நடக்கிறது; கூடுதலாக இன்னொரு மோட்டார் பொருத்தவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.லங்கா கார்னர் பாலத்தில், தண்ணீர் தேங்காத அளவுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதால், கூட்ஸ் ஷெட் ரோட்டில் வழிந்தோடிய தண்ணீர், வாலாங்குளத்துக்கு சென்றது.இதேபோல், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் சுரங்க பாதையில், தண்ணீர் தேங்காத அளவுக்கு தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில், ரோட்டின் குறுக்காக ரெடிமேடு கான்கிரீட் மழை நீர் வடிகால் பதித்து, அரசு கலை கல்லுாரி ரோடு வழியாக கடத்தி, வாலாங்குளத்துக்கு கொண்டு செல்ல ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், ரோட்டில் வழிந்தோடி வரும் மழை நீர், சுரங்கப் பாதைக்கு செல்லும் வடிகால் வழியாக குளத்துக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.
'நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு, 96 கோடி ரூபாய் கேட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அதற்கு முன்னதாக, மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப்பாதை, சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு, ரோட்டின் குறுக்காக மழை நீர் வடிகால் அமைத்து, தண்ணீரை இறக்கி, வடிகாலில் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.