பாரதியார் பல்கலை கிரிக்கெட் அரையிறுதிக்கு எஸ்.என்.எம்.வி. தகுதி
கோவை:பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, சி-மண்டல கிரிக்கெட் போட்டி, செப்., 29ல் எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லுாரியில் துவங்கியது; வரும் 9ல் நிறைவடைகிறது. மாணவர்களுக்கான இப்போட்டியில், 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. முதல் காலிறுதியில் எஸ்.என்.எம்.வி. கல்லுாரி அணியும், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, எஸ்.என்.எம்.வி. அணியினர், 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 163 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய கிருஷ்ணா கல்லுாரி அணியினர், 20 ஓவரில் ஏழு விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தனர். வீரர் தினகர் 53 ரன் எடுத்ததுடன், மூன்று விக்கெட் வீழ்த்தினார். வீரர் அரவிந்த் 32 ரன் எடுத்தார். இரண்டாவது போட்டியில், என்.ஜி.எம். அணியும், ஏ.ஜே.கே. கல்லுாரி அணியும் மோதின. என்.ஜி.எம். அணியினர் 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தனர். ஏ.ஜே.கே. அணியினர் 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 60 ரன் எடுத்தனர். என்.ஜி.எம். வீரர்கள் சூர்யா 94 ரன், தவுபி 57 ரன் எடுத்தனர். மூன்றாவது போட்டியில், எஸ்.டி.சி. அணியும், பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி அணியும் விளையாடின. பொள்ளாச்சி கல்லுாரி அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 86 ரன் எடுத்தனர். எஸ்.டி.சி. அணியினர் 11.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு, 90 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.